பிகார் முதல்வர் நிதிஷ் குமாரையும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியையும் தன்பக்கம் இழுத்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய லாபம் எதுவும் இல்லை. ஆனால், அது எதிர்க்கட்சிகளுக்கு மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா எதிர்க்கட்சிகள் கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் விலகி இருப்பது தேர்தல் அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பி இருப்பது 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர், “எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒரு பகுதியாக நிதிஷ்குமார் இருந்தது ஒரு விஷயமே இல்லை. அவரது சொந்த முயற்சியில் அவர் எதையும் உருவாக்கவில்லை. ஆனால், சிலர் எதிர்க்கட்சி கூட்டணியின் பலமாக நிதிஷ்குமார் இருப்பார் என நம்பினர். நிதிஷை தன்பக்கம் பாஜக இழுத்திருப்பதன் மூலம் தேர்தல் வெற்றிக்காக சமரச உத்தியை பா.ஜ.க. கையாண்டுள்ளது.
அதேவேளையில், எதிர்கட்சிகளுக்கு உளவியல் ரீதியாக ஒரு பின்னடைவை பாஜக உருவாக்கியுள்ளது. ஆனால், இது பாஜகவுக்கு பெரிய ஆதாயத்தை எல்லாம் கொண்டுவராது. இருப்பினும் இப்போதைய சூழலில் பாஜக முன்னிலையில்தான் இருந்தது.
இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி உருவாக்கம் இன்னும் முன்னதாகவே நடந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு 2024-ல் மக்களவைத் தேர்தல் நடக்க இருப்பது தெரியும். கூட்டணியை அவர்கள் 2021, 2022-ல் அமைத்திருந்தால், மற்ற விஷயங்களை பேசி முடிவெடுக்க அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருந்திருக்கும்”. என்றும் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
பாஜகவுடன் இணைந்து பிகார் முதல்வராக 9-வது முறையாக நிதிஷ்குமார் பதவி ஏற்ற போது மற்றொரு ஆங்கில ஊடகத்துக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியின் போது, “மெகா கூட்டணியை நிதிஷ் குமார் தூக்கி எறிந்ததற்காக அவரைக் கடுமையாக சாடினார். மேலும் நிதிஷ் குமார் தனது கடைசி விளையாட்டை விளையாடுகிறார். மக்கள் அவரை நிராகரித்து விட்டார்கள். எனவே தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் எதையும் செய்வார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.