மத்தியப் பிரதேச மாநிலம், கட்னி பகுதியில் செயல்பட்டு வருகிறது வருவாய்த்துறை அலுவலகம். அந்த அலுவலகத்தில் இன்று மாநில லோக் ஆயுக்தாவின் சிறப்புக் காவல் துறையினர் (SPE) குழு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் வராத லஞ்சப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது காவலர்களின் வருகையைக் கண்டதும் ஆய்வுக்கு பயந்து தாம் லஞ்சமாகப் பெற்ற 5000 ரூபாய் பணத்தை என்ன செய்வதென்ற புரியாமல் வாயில் போட்டு மென்று விழுங்கி இருக்கிறார் பட்வாரி கஜேந்திரன் என்ற அதிகாரி.
முன்னதாக, நிலம் தொடர்பான பிரச்னை ஒன்றில் சந்தன் சிங் லோதி என்பவரிடம் அதிகாரி பட்வாரி கஜேந்திரன் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, சந்தன் சிங் லோதி லோக் ஆயுக்தா ஜபல்பூரில் புகார் செய்து இருக்கிறார். அதையடுத்து, வருவாய்த்துறை அலுவலகத்தில் மறைந்திருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், பட்வாரி கஜேந்திரன் லஞ்சப் பணத்தை வாங்கும்போது கையும் களவுமாகப் பிடித்திருக்கின்றனர். அவர் லஞ்சமாகப் பணத்தை வாங்கும்போது திடீரென அதிகாரிகள் உள்ளே நுழைந்ததால் என்ன செய்வதென்று புரியாமல் பதறிய அவர், சட்டென்று அந்தப் பணத்தை தனது வாயில் போட்டு விழுங்கி இருக்கிறார். ஆனாலும், அவர் லஞ்சமாக பணம் பெற்றதையும், அதை அவர் விழுங்கியதையும் காவலர்கள் பார்த்துவிட்டனர். அதையடுத்து, பட்வாரி கஜேந்திரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் விழுங்கிய பணத்தை வெளியே எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இறுதியாக, அவரை வாந்தி எடுக்க வைத்து அந்தப் பணத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
இது பற்றி போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் சாஹு கூறுகையில், "பர்கேடா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தன்னிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகப் புகார் அளித்தார். விசாரணையில் லஞ்சம் கேட்டது உறுதியானது. நாங்கள் அந்த ஆபீசுக்கு சென்று, லஞ்சம் வாங்கும்போது அந்த அதிகாரியைக் கைது செய்தோம். ஆனாலும், அவர் எங்களைக் கண்டு பயந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் பணத்தை விழுங்கிவிட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு பணத்தை வரவழைத்துவிட்டோம். இப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று தெரிவித்தார்.
பட்வாரி கஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்குப் பயந்து அரசு அதிகாரி ஒருவர் லஞ்சப் பணத்தை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.