செய்திகள்

வைத்தியலிங்கம் இல்லத் திருமண விழாவில் நெருக்கம் காட்டிய ஓபிஎஸ் – டிடிவி!

கல்கி டெஸ்க்

மிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  ஆதரவாளரான வைத்தியலிங்கம் இல்லத் திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடல்நலம் சரியில்லாததால் சசிகலா நேரில் வர முடியவில்லை. இதனால் அவர் மணமக்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திருமண விழாவில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர் மிகவும் நெருக்கமாக அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

இந்தத் திருமண விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆருக்குப் பிடித்த தேதி 7. அதிமுக எனும் மாபெரும் இயக்க சகோதரர்களிடையே சிறு சிறு மனக்கசப்புகள் இருந்தாலும், சோழ மண்டலத்தில் ஒன்றாகக் கூடி மணமக்களை வாழ்த்துகிறோம். அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கினார் எம்ஜிஆர். அவருக்குப் பின்னர் யாராலும் வெல்லவே முடியாத மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் காலத்தில் 30 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக அதிமுக இருந்தது. 30 ஆண்டுகளில் இந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவை எந்தக் கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத மாபெரும் எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தின் சாதாரண தொண்டனாக இருப்பதே நமக்கு பெருமை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்படவேண்டும் என்றுதான் அனைத்து இதயங்களும் சொல்கின்றன. அரசியல் விளையாட்டில் நாம் ஒருங்கிணைந்து நின்றால் இந்திய அளவில் யாரும் பெறாத வெற்றியை பெற முடியும்” என்று பேசினார்.

இந்தத் திருமண விழாவில் பேசிய டிடிவி தினகரன், “சிலரது சுயநலம், பேராசை காரணமாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்து கனத்த இதயத்துடன் அமமுகவை தொடங்கினோம். ஆறு ஆண்டுகள் கழித்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது கஷ்டங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக, ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் கைக்கோர்த்து இருக்கிறோம். ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு அதிமுகவுடன் அமமுக எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாமல் இணைந்து செயல்படும். அதற்கான நல்ல தருணத்தை இந்தத் திருமண விழா ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

முன்னதாக, வைத்தியலிங்கம் இல்லத் திருமண விழாவுக்காக இன்று நடைபெற இருந்த அமமுக பொதுக்குழுக் கூட்டத்தை டிடிவி தினகரன் ஒத்திவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! 

SCROLL FOR NEXT