நேற்று ஞாயிறு அன்று காலையில் சென்னை மெரினா பீச்சில் மாணவர் ஒருவர் கண்ணகி சிலை அருகில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தது அப்போது அங்கிருந்த மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்ப்பதாக இருந்தது. மாணவரின் அருகே ஒரு பேனர் இருந்தது, அதில், ‘என் கல்விக்கு உதவுங்கள்’ என்ற வாசகங்கள் இருந்தன. மாணவருக்குப் பின்னால் இருந்த வேலியில் அந்த பேனர் தொங்கவிடப்பட்டிருந்தது.
சுமார் அரைமணி நேரக் கச்சேரிக்குப் பின் அங்கிருந்த மக்களிடம் அந்த மாணவர் பணம் வசூலித்தார், அத்துடன் முடிந்தவரை தனது கல்விக்கு உதவுமாறு கூறி அவர்களிடம் தனது கூகுள் பே எண்களையும் பகிர்ந்து கொண்டார். இதை அங்கிருந்த நபர்களில் ஒருவர் தமது மொபைல் போன் மூலம் ரெகார்டு செய்து சமூக ஊடகங்களில் பகிரவும் அந்த வீடியோ வைரலானது. இதெல்லாம் திருவல்லிக்கேணி துணை கமிஷனரான எம் எஸ் பாஸ்கர் தமது குழுவுடன் அந்த இடத்தை அடைவதற்கு முன்பாகவே நடந்து விட்ட சம்பவம்.
மெரினாவுக்கு விரைந்த துணை கமிஷனர் மாணவரிடம் இது குறித்து விசாரித்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசினார், அப்போது அவர் தெரிவித்ததில் இருந்து சம்மந்தப்பட்ட மாணவரின் பெயர் அ.அஜித்குமார் என்று தெரிய வந்தது. அத்துடன், ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் பயின்று வரும் அந்த மாணவர் தமது கல்லூரிக் கட்டணம் செலுத்த வழியில்லாத காரணத்தால் தன்னிடம் இருந்த வாத்திய இசைத் திறமையை பொதுமக்களின் முன்னிலையில் காட்சிக்கு வைத்து அதன் மூலமாகக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கல்லூரிக் கட்டணம் செலுத்தும் நோக்கில் இப்படி ஒரு இசைக் கச்சேரியை திறந்த வெளியில் நடத்தியது தெரிய வந்தது.
ஒரு பைலட் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் அந்த மாணவருக்கு பொருளாதார ரீதியாக உதவும் நிலையில் அவரது குடும்பச் சூழல் இல்லை. ஏதாவது பகுதி நேர வேலைகள் செய்து பணம் ஈட்டலாம் என்றால், அதில் கிடைத்த தொகை கல்லூரிக் கட்டணம் செலுத்தும் அளவுக்கு போதுமானதாக இல்லை. எனவே தான் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியதாக கமிஷனரிடம் அந்த மாணவர் தெரிவித்திருக்கிறார்.
மாணவரின் நிலை கண்டு மனம் நெகிழ்ந்த துணை கமிஷனர் பாஸ்கர், அவருக்கு தன் பங்காக ரூ 2000 அளித்ததோடு, அவரது பழுதான மொபைல் போனையும் சரியாக்கித் தந்து மாணவருக்கு தொழில் கல்வி குறித்த ஆலோசனையும் வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் மாணவரின் கல்லூரிக் கட்டணத்திற்காக தகுதி வாய்ந்த என் ஜி ஓக்களையும் அவர் அணுகியதாகவும் அவர்கள் மூலமாக
இனி மாணவருக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்த தக்க உதவி கிடைக்கும் என அவர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.