மதுரை பெத்தானியாபுரத்தில் அமமுகவின் கொடியை ஏற்றி வைத்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசினார். அப்போது அவர், “அமமுக ஆட்சி, அதிகாரத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு துரோகம் செய்தபோது இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை, குக்கர் சின்னத்தை வைத்துதான் மீட்க முடியும். அமமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. 2026ம் ஆண்டு உண்மையான ஜெயலலிதாவின் வாரிசுகள் ஒன்று சேர்வோம்” என்று பேசினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டிடிவி, ஓபிஎஸ் இணைந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி பதறுகிறார். ஓபிஎஸ்ஸும் நானும் நீண்ட கால நண்பர்கள். விதியின் சதியால், சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்து இருந்தோம். ஓபிஎஸ்ஸும் நானும் மீண்டும் இணைந்து இருக்கிறோம். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஓய மாட்டோம். பண மூட்டையுடன் உள்ளவர்களை வீழ்த்தி அதிமுகவை மீட்டு தொண்டர்களின் கைகளில் ஒப்படைப்போம். தற்போது அதிமுக சுயநலவாதிகள் கையில் சிக்கி உள்ளது. அதிமுகவை மீட்கும் பொறுப்பு எனக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் உண்டு.
ஆளும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் அறுபது மாதங்களில் கிடைக்கவேண்டிய கெட்ட பெயர், இருபத்திநான்கு மாதங்களில் வந்திருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகி இருந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவி விலக வேண்டும் என்று கேட்கும் தகுதி பழனிசாமிக்கு இருந்திருக்கும். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதிமுகவின் வழக்குகளில் தற்போது பழனிச்சாமி வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால், இறுதியில் ஓபிஎஸ் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்பார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சசிகலா முதல்வராக வேண்டும் என அனைவரும் விருப்பப்பட்டார்கள். அதனால் ஓபிஎஸ்ஸை ராஜினாமா செய்யச் சொன்னோம். எனது வேண்டுகோளை ஏற்றே ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். நாங்கள் இருவரும் சுயநலத்தால் இணையவில்லை. அதிமுகவை மீட்டெடுக்கவே இணைந்து இருக்கிறோம். தற்போது நானும் ஓபிஎஸ்ஸும், சிபிஎம் - சிபிஐ போல செயல்படுவோம். அதிமுகவை மீட்டெடுத்த பிறகு நாங்கள் ஒன்றினைந்து செயல்படுவோம்” என்று கூறினார்.