இலங்கையைத் தொடர்ந்து தற்போது கென்யாவிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அந்த அரசு விலை மற்றும் வரிகளை உயர்த்தியுள்ளது. இதனால், மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆஃப்ரிக்கா நாடான கென்யாவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாததால், முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டது. அதனை சமாளிக்க முடியாமல் மக்கள் தடுமாறி வந்தனர். இதனையடுத்து தற்போது கென்யாவின் அதிபர் வில்லியம் ரூடோ வரிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த திட்டத்துக்கு அந்த நாட்டு மக்கள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வரிவிதிப்பு தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடந்துள்ளது. அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, தடுப்புகளை உடைத்தனர். இதனை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளை செய்தனர்.
நாடாளுமன்றம் உள்ள பகுதியில் மட்டுமல்ல கென்யாவின் பல பகுதிகளில் விலை மற்றும் வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல், அரசு தவிக்கிறது. போலீஸார் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை போன்றவற்றைப் பயன்படுத்துவதால், மக்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதனால், இருத்தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இந்த சூழலை கட்டுபடுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதேபோல்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலும் நடந்தது. கடுமையான நிதி நெருக்கடியால், உள்நாட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் விலை உயர்த்தப்பட்டது. இதன்விளைவாக போராட்டங்கள் வெடித்தன. அரசே கலைக்கப்பட்டது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் இலங்கை மீண்டு வந்துக்கொண்டிருக்கிறது.
அதே சூழல்தான் தற்போது கென்யாவிலும் நிகழ்கிறது.