கோயம்புத்தூர், சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் மீது பைக்கில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதை தொடர்ந்து ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பாஜகவினர் வந்து குவிந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏரளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்புகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் கோவையில் அந்த அமைப்பை சேர்ந்த இருவரை என்ஐஏ அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.