பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆரம்பமாகியிருக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனை என்கிறார், பீகாரின் துணை முதல்வர் தேஜஸ்வீ யாதவ்.
ஜனவரி 21 வரை தொடர்ந்து நடைபெறும் முதல் கட்ட கணக்கெடுப்பில் வீடு வீடாக கணக்கெடுப்பு நடக்கிறது. இரண்டாவது கட்டப் பணிகள் மார்ச் மாதம் ஆரம்பமாகும். பீகார் மக்களின் ஜாதி, உட்பிரிவுகள். மதம், பெருளாதார நிலை அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன. மே மாத இறுதிக்குள் பீகாரிகளின் ஜாதி, மதம், பொருளாதார நிலை அனைத்தும் கையில் கிடைத்துவிடும்.
பீகாரில் வசிக்கும் 12.7 கோடி பேரின் விவரங்கள் கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட உள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பார்கள். ஏற்கனவே கர்நாடகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியம் என்பதை கர்நாடாகாவும் பீகாரும் நிரூபித்திருக்கின்றன.
இதற்காக பீகார் மாநில அரசு, 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த ஜாதி வாரி புள்ளிவிவரங்கள் தேவைப்படுவதாக கணக்கெடுப்பை நியாயப்படுத்துகிறது. ஏழைகளுக்கு எதிரான கட்சியான பா.ஜ.கவை எதிர்கொள்ள இது அவசியம் என்கின்றன பீகாரின் அரசியல் கட்சிகள்.
இதுவொரு சமூக நீதி நடவடிக்கை என்கிறார், பா.ம.க நிறுவனர் ராமதாஸ். தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. பா.ஜ.க எதிர்த்தாலும் அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க உள்ளிட்டவை ஜாதி வாரி கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன.
2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்கிற கோரிக்கை பல மாநிலங்களில் எழுந்திருக்கிறது.
இந்திய அரசியலே ஜாதி அடிப்படையில்தான் இயங்குகிறது. முழுக்க நனைந்த பின்னர் முக்காடு எதற்கு என்கிறார்கள். கரெக்ட்தான்!