விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெருவில் மிகவும் வயதான மூதாட்டி ஒருவர் உண்பதற்கு உணவு ஏதும் கிடைக்காமல் பசியால் உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாளுக்கு ஒரு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, விருதுநகரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு விரைந்து வந்த ஸ்ரீனிவாசபெருமாள், அந்த மூதாட்டிக்கு வேண்டிய முதலுதவி செய்து, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்க உதவி செய்தார். அதோடு, சிகிச்சைப் பெற்று வரும் அந்த மூதாட்டிக்கு உடனிருக்கு உதவி செய்ய பெண் காவலர் ஒருவரையும் நியமித்து இருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சீனிவாசபெருமாள் கூறுகையில், “இந்த மூதாட்டி இப்படி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது குறித்து எனக்கு பிரத்யேகத் தகவல் ஒன்று கிடைத்தது. அதனால் உடனே புறப்பட்டு அவரைப் பார்க்க வந்தேன். அவருக்கு மருத்துவ சிகிக்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சிகிச்சை முடித்து அவரது உடல் நலம் தேறியவுடன் அவரை ஒரு முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறி இருக்கிறார்.
முன்னதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் இந்த மூதாட்டியைக் காண வரும்போது அவருக்கு பழங்கள் மற்றும் அவர் உடுத்திக்கொள்ள உடைகளும் வாங்கி வந்தார். நிராதரவான நிலையில் பசியால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டிக்கு தகவல் கிடைத்தவுடன் உடனே ஓடி வந்து உதவிய அந்த போலீஸ் அதிகாரியை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.