சென்னையில் போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் அதிகம் நடப்பதால், அதைக் கட்டுக்குள் கொண்டுவர புதிய வழிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது காவல்துறை.
எப்பொழுதுமே தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மிகவும் கடுமையாக இருக்கும். அதை மீறுபவர்களின் அபராதத் தொகையும் சமீபத்தில் தான் உயர்த்தப்பட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் மேலும் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. காரணம், சென்னையில் கடந்த சில மாதங்களாகவே போக்குவரத்து விதிமீரல் சம்பவங்கள் அதிகம் நடப்பதாக புகார்கள் குவிந்துவருகின்றன என்பதுதான்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் செய்பவர்களைக் கண்டுபிடிக்க, புதிய அபராத முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த புதிய வழிமுறையில் இனிமேல் விதிமீறல் செய்பவர்களைப் பிடித்து அபராதம் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஒரு போட்டோ எடுத்து வாகன எண் இணைக்கப்பட்டிருக்கும் போனுக்கு அபராதத் தொகை நேரடியாக அனுப்பப்படும். உதாரணத்திற்கு ஒரு நபர் ஹெல்மெட் அணியாமல் போலீஸிடமிருந்து தப்பிக்க அதிவேகமாக வாகனத்தை செலுத்தினால், போலீசாரால் அவரைப் பிடிக்க முடியவில்லை என்றாலும், உடனடியாக அந்த வாகன எண்ணை போட்டோ எடுத்துக் கொண்டால், அபராதம் நேரடியாக அவருடைய போனுக்கு வந்துவிடும்.
ஏற்கனவே பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இது நடைமுறையில் உள்ளது. என்றாலும், சென்னையில் இந்த விதிமுறையில் மேலும் சில கூடுதல் வழிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. போலீஸ் மட்டுமின்றி பொதுமக்களும் விதிகளை மீறும் வாகனத்தை போட்டோ எடுத்து, ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யலாம். அதை காவல்துறையினர் கண்காணித்து உண்மையிலேயே அந்த நபர் விதிமீறல் செய்திருந்தால், அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த சில நாட்களாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக ஆம்புலன்ஸ்க்கு வழிவிடவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் செல்வது மிகப்பெரிய குற்றமாகும். இதில் எந்த வாகனமாக இருந்தாலும் அபராதம் அதிரடியாக வசூலிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தீயணைப்பு வண்டிக்கும் வழி விடவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம். காரணம் இல்லாமல் ஹாரன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம். சரக்கு வாகனங்களில் சராசரி அளவைவிட அதிக எடை ஏற்றினால் 20000 ரூபாய் உடனடியாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ட்ராபிக் சிக்னலில் 'ஸ்டாப்லைன்' கோட்டைத் தாண்டி வாகனங்கள் நின்றால், ரூபாய் 500 அபராதம் விதிக்கலாம் என்பதையும் இணைத்துள்ளார்கள். இதற்கு முன்னதாக இந்த குற்றத்திற்கு அபராதம் ஏதும் வசூலிக்கப் படவில்லை. இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று சென்னை முழுவதும் 287 இடங்களில் போலீசார் மேற்கொண்டனர்.