செய்திகள்

பல மாநில முதல்வர்களின் பிரதமர் கனவு: பிரதமர் பதவி காலியில்லை யாரும் முயற்சிக்க வேண்டாம்!

ஜெ.ராகவன்

நாட்டில் இந்த ஆண்டு 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 2024 ஆம் ஆண்டு மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இப்போதே பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.

பா.ஜ.க.வுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் முயற்சியாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கிய அவரது யாத்திரை 3750 கி.மீ. தொலைவை கடந்து இந்த மாத இறுதியில் காஷ்மீரில் முடிவடைகிறது.

ராகுலின் இந்த யாத்திரைக்கு கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் சமாஜவாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி உள்ளிட்டோர் அதில் பங்கேற்காமல் வாழ்த்து மட்டும் தெரிவித்தனர்.

இந்த சூழலில் ஒற்றுமை யாத்திரை மூலம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ராகுலின் முயற்சி வெற்றிபெறுமா என்பது தெரியவில்லை.

ஏனெனில் அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத், 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திதான் எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாரத ராஷ்ட்டிரீய சமிதியின் (முன்னர் தெலங்கானா ராஷ்ட்டிரீய சமிதி) தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர் பிரதமர் பதவியை குறிவைக்கும் வகையில் அரசியல் நடத்தி வருகின்றனர். இந்த

நிலையில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், இனி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று கூறிவருகிறார். எனவே அவருக்கும் பிரதமர் ஆகும் கனவு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் தாம் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேருமா என்பது சந்தேகமே.

இதனிடையே நோபல் பரிசு வென்றவரும், பொருளாதார நிபுணருமான அமர்த்தியா சென், ஒரு பேட்டியில், மேற்கு வங்கமாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நாட்டின் பிரதமராகும் அனைத்து தகுதியும் உள்ளது. அடுத்த பிரதமர் அவர்தான் என தெரிவித்துள்ளார். மேலும் 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கான பந்தயத்தில் நரேந்திர மோடி ஒருவர் மட்டுமே இருப்பார் என்று யாராவது கருதினால் அது தவறானதாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். (மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்கம் தவிர்த்து வெளிமாநிலங்களில் செல்வாக்கு இருக்கிறதா, அவரால் பா.ஜ.க.வுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட முடியுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.)

இதனிடையே அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டில் பிரதமர் பதவி ஏதும் காலியாக இல்லை. 2024 தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் அமோக வெற்றிபெறும். நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக இருப்பார். கடந்த இரண்டு தேர்தலில் மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்திருந்தனர். 2024 தேர்தலிலும் அது தொடரும். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதி என தெரிவித்துள்ளார்.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT