விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் போக்கைக் கண்டிக்கும் விதமாக இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "என்எல்சி நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிரந்தர வேலை, உரிய இழப்பீடு தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எனது தலைமையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம். இது குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் 1500 பேருக்கு வேலை மற்றும் நிரந்தர வேலை வழங்குவதாக என்எல்சி நிர்வாகம் உறுதி அளித்தது. அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி அளித்து அதன் பிறகு வேலையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையாக நான்கு லட்ச ரூபாய் தருவதாக என்எல்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர்.
மேலும், நிலம் வழங்கியவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, கூடுதல் இழப்பீடு போன்றவற்றை வழங்க என்எல்சி நிர்வாகம் இரண்டு மாதத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்பதனை எச்சரிக்கையாகத் தெரிவிக்கின்றோம்” என்று வேல்முருகன் கூறி இருக்கிறார். அப்போது மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.