லைக்கா தயாரிப்பில் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள்,ஐஸ்வர்யா ராய் , த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா ஆகியோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது பொன்னியின் செல்வன் II திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு வழக்கத்தினை விட கலகலப்பாகவே பதிலளித்தார் இயக்குனர் மணிரத்தினம்.
அப்போது பேசிய இயக்குநர் மணிரத்னம், “ இனி வரும் காலங்களில் பொன்னியின் செல்வனைப் போன்ற வரலாற்றுப் படங்கள் நிறைய எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என்றார் இயக்குநர் மணிரத்னம். நரிக்குறவர் சமூகத்தினரை திரையரங்கில் அனுமதிக்க மறுத்தது, உங்களைப் போல எனக்கும் மிக வருத்தம் தான். அதை நாம் தான் மாற்ற வேண்டும்.
ராஜா ராஜா சோழன் இந்து என்று பேசப்பட்டது, தமிழ் மன்னனை இந்து என காட்டியதாக சொல்லப்பட்டது இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், “தேவையில்லாத சர்ச்சைகள் தேவையில்லை. கல்கி என்ன எழுதினாரோ அதை வைத்து தான் படம் எடுத்துள்ளேன். அவர் சொன்ன கதாபாத்திரங்கள் தான் இதில் இருக்கும். இரண்டாம் பாகத்திலும் அது தான் இருக்கும்” என்றார்.
“பொன்னியின் செல்வன் படத்தில் மதத்தை ஏன் நுழைக்கிறீர்கள்? கல்கி எழுதியதை வைத்து உருவாக்கியது. ராஜராஜ சோழனின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். பொன்னியின் செல்வன் தொடர்பாக அனாவசியமான சர்ச்சைகள் தேவையற்றவை” என்று பதிலளித்துள்ளார்.
அப்போது பான் இந்தியா படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து வருகின்றன. அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் 1000 கோடி வசூலிக்குமா? என்கிற கேள்விக்கு
பதிலளித்த இயக்குனர் மணிரத்னம், “நமக்கு ஏன் இந்த கணக்கு. எனக்கு படம் தான் முக்கியம். எனக்கு படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. நீங்கள் படம் பாக்கிறீர்கள். நீங்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அது எனக்கு போதுமானது. அது தான் முக்கியம். அதைத் தாண்டி படம் எவ்வளவு வசூல் செய்தாலும் நன்றுதான். பண கணக்கு குறித்து தற்போது யோசிக்க தேவையில்லை ” என்றார்.
மேலும் இந்த சந்திப்பில் பொன்னியின் செல்வன் நடிகர்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர் . நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா ஆகியோரிடமும் குறும்பான கேள்விக்கணைகள் வீசப்பட்டது. மேலும் நிகழ்ச்சிக்கு சுவைகூட்டும் விதமாக நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஆகியோரின் கலக்கல் பதில்கள் சுவாரஸ்யம் கூட்டியது.