சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.20 கோடி என்று தகவல் தெரிவிக்கிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய 09.11.2022 - ஆம் தேதியிலிருந்து 08.12.2022- ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"2023-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 01.01.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 09.11.2022 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 10,54,566 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 10,17,141 விண்ணப்பங்கள் (ஆண்கள் 4,70,291 ; பெண்கள் 5,46,225 ; மூன்றாம் பாலினத்தவர் 625) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பெயர் நீக்கலுக்காக 8,43,007 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,02,136 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (5,32,526), இறப்பு (2,47,664) மற்றும் இரட்டைப் பதிவு (21,946) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 2,15,308 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1,13,047 ; பெண்கள் 1,02,165 ; மூன்றாம் பாலினத்தவர் 96) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866; பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) உள்ளனர்.
ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிதான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,34,081; பெண்கள் 3,32,096; மூன்றாம் பாலினத்தவர் 118).
இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,57,408 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,27,835; பெண்கள் 2,29,454; மூன்றாம் பாலினத்தவர் 119).
தமிழ்நாட்டிலேயே சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகம் சட்டமன்றத் தொகுதிதான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்ட தொகுதியாக உள்ளது.
இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,70,125 பேர்.
இதில் ஆண்கள் 88,396 பேர், பெண்கள் 81,670 பேர், மூன்றாம் பாலினத்தவர் 59 பேர்.
இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் இருப்பது நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,75,128 பேர். இதில், ஆண்கள் 85,652 பேர், பெண்கள் 89,474 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 3,310 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன."
இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.