ஜப்பான் விஞ்ஞானிகள் தற்போது புதியதொரு அசத்தல் சாதனையைப் படைத்துள்ளனர். அதாவது மனிதர்கள்போல் புன்னகை செய்யும் ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர்.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, தொழில்நுட்பத்தில் போட்டிபோட்டு புதிதுபுதிதாக கண்டுபிடித்து வருகின்றன. சீனா சமீபத்தில் நிலாவின் இருண்ட பகுதியிலிருந்து மண் எடுத்து வந்து சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜப்பானும் புதிய வகையான ரோபோ கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளது.
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோ என்றால், இந்தியர்களுக்கு சிட்டி ரோபோதான். படத்தில் சிட்டி ரோபோ உணர்ச்சிகளை மனிதர்களிலிருந்து கற்றுக்கொள்ளும். ஆனால், இங்கு அடுத்தக்கட்ட முயற்சியாக தொழில்நுட்பம் மூலம் சிட்டி ரோபோ மாதிரியே கண்டுபிடித்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.
ஜப்பான் விஞ்ஞானிகள், மனிதர்களின் தோல் செல்களைப் பயன்படுத்தி, ஓர் ஹ்யூமனாயுட் ரோபோவுக்கு இயற்கையான புன்னகை வழங்கும் முகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய முயற்சியில், அதாவது புன்னகைக்கும் முகத்தைக் கொண்டுவர, அவர்களுடைய ஆய்வகக் கூடத்தில் வளர்க்கப்பட்ட மனித தோல் செல்களை பயன்படுத்தியுள்ளனர்.
மனித தோல் எவ்வாறு உடலுடன் இயற்கையாக இணைக்கப்படுமோ, அதேபோல்தான் இங்கும் இணைத்துள்ளனர். தோல் தசைகளைப் போன்ற ஒரு கட்டமைப்பை கொலாஜென் மூலம் உருவாக்கி அதன்மீது உயிரோடு இயங்கும் தோல் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் முகத்தின் தசை அசையும்போது, தோலும் அசைந்து இயற்கையான புன்னகையை உருவாக்கும்.
இந்த ரோபோக்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, தீக்காயங்கள் போன்ற காயங்கள் ஏற்பட்டால், அதனை தானாகவே குணப்படுத்திக்கொள்ளும் திறனுடனும் வடிவமைத்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் மனிதர்கள் மற்றும் ரோபோக்களின் உறவில் புதிய பரிமாணம் ஏற்படும். மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ரோபோக்கள் பல வழிகளில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, மருத்துவம் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றும் என்றே எதிர்பாரக்கப்படுகிறது.
தற்போது இந்த ஜப்பானிய ரோபோக்களின் மேல்தான் உலக மக்களின் கண்கள் உள்ளன. விட்டா.. ரோபோவை ஒரு முழு மனிதனாவே மாத்திருவாங்க போலப்பா…