செய்திகள்

அமராவதி ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவு நீர் - அரசு அதிகாரிகள் விளக்கம் தரவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!

ஜெ. ராம்கி

மதுரை, கரூர் மாவட்டங்களில் ஓடும் அமராவதி ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் ஆற்றங்கரையோரம் சாயப்பட்டறை ஆலைகள் செயல்பட தடை இருந்து வருகிறது. அதையும் மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி கேட்டு, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர், கரூர் உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றில் இருந்து 860 மீட்டர் தூரத்தில் சாயப்பட்டறை அமைத்து, கழிவுகளை ஆற்றில் கலக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சார்பாக 14 கட்டிடங்கள் கட்டப்பட்டு, விதி மீறல் நடத்திருப்பதாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள்.

2020-ம் ஆண்டிலேயே மனுதாரர் உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக நகர் மற்றும் ஊரமைப்புத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்து பொதுநல வழக்குகள் நிலுவையில் இருந்தும் அமராவதி கரையோர சாயப்பட்டறை நிறுவனங்கள் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகின்றன.

மாசு கட்டுப்பாடு வாரியமும் சம்பந்தப்பட்ட பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். சாயப்பட்டறைகளில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றினால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்படவும் அபராதமும் விதிக்கவும் உத்தரவிடமுடியும். அனுமதியின்றி சாயப்பட்டறை அமைக்க வாடகைக்கு நிலம் கொடுத்தால் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடருவதுடன் அவர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை வசூலிக்கமுடியும்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் சில சாயப்பட்டறைகளில் பூஜ்ஜிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருந்தும் சிலர் அதை பயன்படுத்துவதில்லை. கழிவுநீரை நேரடியாக சாக்கடை கால்வாயில் வெளியேற்றும் சம்பவங்கள் தொடர்கின்றன. உரிய நடவடிக்கை எடுத்தால் லட்சக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

சாயப்பட்டறைகள் விஷயத்தில் முன்பை விட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சாயப்பட்டறைகளினால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர், மண் வளம் கடுமையாக பாதிக்கப்படும். கிணறுகள், குளங்களில் கழிவுகள் கலந்து தண்ணீர் மாசுபட்டுவிடும். விவசாயம் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் தரிசாகிவிடும். இது தவிர குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் மக்களுடம் உடனே எதிர்க்க தயாராக இருக்கிறார்கள்.

மனதுக்கு குற்ற உணர்வை தரும் பிழைகள்!

Sea Moss: தைராய்டை குணப்படுத்தும் கடல் பாசி! 

தியாகராய நகரில் சாலையோர கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்!

உண்மையான சந்தோஷம் என்பது எது தெரியுமா?

பரவசமூட்டும் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி!

SCROLL FOR NEXT