சட்டப்பேவை கூட்டத்தொடரை காண வந்த பள்ளி மாணவர்களை, நீங்களும் ஒரு நாள் சட்டமன்ற உறுப்பினர்களாக வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாழ்த்தி வரவேற்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தை நேரில் காண வந்த திருச்செந்தூர் செயிண்ட் தாமஸ் பள்ளி மாணவர்கள் தலைமைச் செயலகம் வந்தனர்.
அப்போது பேரவைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மாணவர்களை பார்த்து எங்கிருந்து வந்துள்ளீர்கள் சாப்பிட்டீர்களா என விசாரித்தார். மேலும் நீங்களும் ஒரு நாள் சட்டமன்ற உறுப்பினர்களாக வர வேண்டும் என வாழ்த்தினார்.
பேரவை நிகழ்ச்சிகளை கண்டப்பின் செய்தியாளர்களை சந்தித்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை கண்டது என்றும் மறக்க முடியாது என கூறினர். இதே போல் சோளிங்கர் விவேகானந்தபீடம் பள்ளி மாணவர்கள் மற்றும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்களும் பேரவை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.