செய்திகள்

பெல்காம் யாருக்கு? சந்தன மாநில​ம் vs சிவாஜி மாநிலம்!

கல்கி

-ஜி.எஸ்.எஸ்.

காராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் சமீபத்தில் மேடை ஒன்றில்  'இது மகாராஷ்டிர மாநிலம் உருவான தினம்.  இதை நாம் கொண்டாடுகிறோம்.  ஆனால் மராத்தி மொழியைப் பேசிக் கொண்டிருக்கும் சில பகுதிகள்  நம் கையை விட்டுப் போனது வருத்தம்தான். 

முக்கியமாக பெல்காம், நிபாய், கார்வார் போன்றவை.  உங்களுக்கு நான் ஒரு உறுதிமொழி அளிக்கிறேன் அதை மகாராஷ்டிராவின் பகுதிகளாக வேண்டுமென்று அங்குள்ள மராத்திய மக்கள் செய்யும் போராட்டத்திற்கு நாமும் நிச்சயம் ஆதரவளிப்போம்'. 

ஆனால் (எதிர்பார்த்தபடி) கர்நாடக மாநிலம் இந்தப் போராட்டத்தை சிறிதும் ஏற்கவில்லை. இரு மாநிலத் தலைவர்களும் அவ்வப்போது இதுகுறித்து மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.  சென்ற  டிசம்பர் மாதம் கூட இந்த போராட்டம் முற்றியதால் பெல்காம் நகரில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. 

பெல்காம் குறைந்தபட்சம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிறது மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சிவசேனா. இதைத் தங்கள் அதிகாரப்பூர்வமான இதழில் இதழான 'சாமனா'விலும் அறிவித்திருக்கிறார்கள்.   இதுதொடர்பாக ராஜ் தாக்கரே அவுரங்காபாத்தில் ஒரு பெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். 

பண்டைய காலங்களில் பெல்காம் வேள்கிராமம், வேள்காமம்                    (மூங்கில்கள் நிறைந்த சிற்றூர்) என அறியப்பட்டது.  பின்னர் அருமையான வெப்பநிலை, கடற்கரைக்கு அருகாமை ஆகியவற்றின் காரணமாக ராணுவ பயிற்சிக்கு ஏற்ற இடம் என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானித்தது.  ராணுவத்தினரின் பிரம்மாண்ட தங்குமிடங்களும் இங்கு உண்டு.

பிரிட்டிஷ் இந்தியாவில் பாம்பே ராஜதானி என்ற பகுதியில் இடம்பெற்றிருந்தது பெல்காம்.  அப்போது இன்றைய குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக விளங்கியது பாம்பே ராஜதானி. 

1881 மக்கள்தொகைக் கணக்கின்படி பெல்காமில் வசிக்கும் மக்களில் சுமார் 64 சதவிகிதம் பேர் கன்னட மொழியையும் 26 சதவிகிதம் பேர் மராத்தி மொழியையும் பேசினர். . 

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பெல்காம் மாவட்டம் பாம்பே மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது.  ஆனால் 1956இல் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி இந்த மாவட்டம்  புதிதாக உருவான மைசூர் மாநிலத்துக்கு சென்று விட்டது (முந்தைய மைசூர் மாநிலம்தான் இப்போதைய கர்நாடக மாநிலம்). 

ஒரு காலத்தில் பெல்காம் கன்னடப் பிரதேசமாகவே இருந்து வந்திருக்கிறது.  ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து நிலைமை மாறியது.  பேஷ்வாவின் தலைமையில் மராட்டியப் பேரரசு வெகு வேகமாகப் பரவியது.  எனவே இங்கு பல மராத்தியர்கள் குடி புகுந்தனர். 

பெல்காம், பீஜாப்பூர் தார்வார் ஆகிய பகுதிகளை இன்றளவும் மகாராஷ்டிராவில்  'தெற்கு மராத்திய நாடு' என்றே அழைக்க, அதற்கு கர்நாடகா தன் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. 

மகாராஷ்டிரத் தலைவர்களில் ஒருவரான சேனாபதி பபட் என்பவர் இதுதொடர்பாக உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.  இரு மாநில எல்லை தகராறுகளை தீர்க்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்று போராடினார். இந்திய அரசு இந்த சிக்கலை தீர்ப்பதற்காக 1960இல் மகாஜன் குழு என்ற ஒன்றை அறிவித்தது. 

இந்த குழுவில் மகாராஷ்டிரத்தின் பிரதிநிதியாக இரண்டுபேரும் மைசூர் மாநிலத்தின் பிரதிநிதியாக இரண்டு பேரும் கலந்து கொண்டனர்.  தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை என்றாலும் பெல்காம் கர்நாடகத்தைச் சேர்ந்தது என்றது இந்தக் குழுவின் அறிக்கை.  இது மக்களுக்கு எதிரானது என்று கொதித்தது மகாராஷ்டிர அரசு.  

இந்தக் குழுவின் அறிக்கையில் வேறொன்றும் நடந்தது.  கேரளாவில் இருந்த கசரகோட் என்ற பகுதியும் கர்நாடகாவைச் சேரும் என்றும் இந்த அறிக்கை கூறியது.  கேரளா இந்தப் பகுதியை கர்நாடகாவிற்கு கொடுக்க சம்மதிக்கவில்லை.  இதே அடிப்படையில் பெல்காம் பகுதியை தாங்கள் கர்நாடகாவுக்கு கொடுத்திருக்கக் கூடாது என்று மகாராஷ்டிர தலைவர்கள் கூறுகிறார்கள். 

1951ல் நடைபெற்ற ஒரு மக்கள் கணக்கெடுப்பில் பெல்காமில் சுமார் 60 சதவிகிதம் பேர் மராத்தி பேசுபவர்கள் என்பதும் 18.8 சதவிகிதம் பேர் கன்னட மொழி பேசுபவர்கள் என்றும் தெரியவர நிலைமை மேலும் சிக்கலானது.  

பெல்காம் குறித்த தங்கள் ஆளுமையை அவ்வப்போது இரு மாநிலங்களும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.  பெல்காமில் கர்நாடக அரசு தனது அறிவிப்புகளை மராத்தியில் மொழிபெயர்த்து அனுப்பவில்லை என்று மகாராஷ்டிரா அரசு புகார் செய்தது (ஒரு பகுதியில் சிறுபான்மை மொழி மக்கள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால் அங்கு அரசின் சுற்றறிக்கைகள் ஆவணங்கள் போன்றவை அந்த சிறுபான்மை மொழியிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட வேண்டும் என்கிறது சட்டம்).  

கர்நாடகாவில் இயங்கும் கன்னட ரக்ஷன வேதிகே என்ற தீவிர அமைப்பு எதிர்த்தரப்பு பிரதிநிதிகளை தாக்கிய சம்பவங்களும் உண்டு. 

 கர்நாடகாவின் இரண்டாவது தலைநகரம் என்று பெல்காமை  அறிவிப்பதற்கு ஒரு முயற்சியை முன்னெடுத்தது அந்த அரசு.  இதற்காக 2012 அக்டோபர் 11 அன்று அங்கு ஒருபெரும் நிர்வாகக் கட்டிடம் திறக்கப்பட்டது.  இதற்கு ஸ்வர்ண விதான சௌதா என்று பெயரிடப்பட்டது (பெங்களூருவில் சட்டமன்றம் இயக்கும் கட்டிடத்தின் பெயர் விதான் சவுதா). 

2014ல் இந்த நகரின் பெயர் பெல்காம் என்பதிலிருந்து பெலகாவி என்று கர்நாடக அரசால் மாற்றப்பட்டது. 

அசாம்-மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கும்  அவற்றின் எல்லைப் பகுதிகளுக்கு இடையே உள்ள கிராமங்கள் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வலுவான கருத்து வேறுபாடுகள் உண்டு.  பர்வா​னூ என்ற பகுதி யாருக்கு என்பதில் ஹரியானாவும் இமாச்சலப் பிரதேசமும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன.  சரச்சு என்ற பதி என்ற பகுதி தன்னுடையதுதான் என்று லடாக் யூனியன் பிரதேசமும் இமாச்சலப் பிரதேச மாநிலம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. 

ஆக எல்லை தகராறு என்பது இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் மட்டுமல்ல.. உள்நாட்டிலும் இருக்கிறது.

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT