வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தயிருந்த தேதிகள் மாற்றியமைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த அக்டோபர் 27ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த பணி டிசம்பர் 9ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும், இதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கமும் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 27.10.2023 முதல் 05.01.2024 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே, இது தொடர்பான சிறப்பு முகாம்கள் 04.11.2023 மற்றும் 05.11.2023 ஆகிய தேதிகளில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தமிழக அரசால், 18.11.2023 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் தேதிகளை 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை)–க்கு பதிலாக, 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளாக மாற்றியமைத்து அறிவித்துள்ளது.