அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள இந்த நிலையில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி பொதுக்குழு முடிவு செல்லாது என உத்தரவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது. இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முடிவுகளில் எதிரொலிக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வெளியானால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடருமா? இல்லையெனில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியே தொடருவாரா ? கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு செல்லுமா? அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நிலவி வரும் குழப்பத்திற்கும் விடை கிடைக்கும் என்று அதிமுக தொண்டர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.