தமிழக அரசு வழங்கும் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் பேன்ற திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்குப் போய்ச் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் அரசு வெளியிட்டது. அதில், தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் பலன் பெற விரும்புபவரின் திருமணம் மண்டபத்தில் நடைபெற்று இருந்தால் அந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்தத் திருமண உதவி பெறும் திட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளிப் பெண், பட்டப்படிப்பு படித்திருந்தால் 8 கிராம் தங்கம் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பணமும், அதற்குக் கீழ் அப்பெண்ணின் கல்வித் தகுதி இருப்பின் அவர்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் ரொக்கப் பணமும் அரசால் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திருமண உதவித் திட்டத்தின் கீழ், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதி உதவித் திட்டம் என சில திருமண நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு வழங்கி வரும் இந்தத் திருமண நிதி உதவித் திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித் தொகை 20,000 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன், மணமகள் ஆடைகள், இருபது பேருக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, மெத்தை, கட்டில், தலையணை, கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாய், பாத்திரங்கள் போன்ற பொருட்களின் செலவினையும் அறநிலையத் துறையே ஏற்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.