மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சிக் மாண்டோவியாவிடம் 14 கோரிக்கை அடங்கிய மனுவை அளித்துள்ளார் தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒன்றிய அரசு சுகாதாரத்துறை அமைச்சர் மன்சிக் மாண்டோவியா தலைமையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு 2023 இன்று தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சிக் மாண்டவியாவிடம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகள் இல்லாத ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும். செவிலியர் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்க கோரியும், மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கல்வி விரைவு ஒழுங்கு முறை விதிக்கு எதிர்ப்பு, தமிழ்நாடு அரசு வழங்கி வரும் இட ஒதுக்கீடு முறைக்கு ஆபத்தாக வந்துள்ள பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டில் தேசிய மருத்துவ ஆணையத்தின் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்க வேண்டும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான காலியிடங்களை முழுமையாக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். மதிப்பீடு மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு சம்பந்தமாக புதிதாக கொண்டு வந்திருக்கக்கூடிய நடைமுறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை அளித்தார்.
மனுவில் கூடுதலாக தமிழ் நாட்டிற்கு 50 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1000 துணை கிராமப்புற சுகாதார நிலையங்கள், 1000 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 50 சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும், ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் மேலும் 100 படுக்கைகளை அதிகரிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அமைச்சரிடம் மனு வழங்கினார். அப்போது தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உடன் இருந்தார்.