சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்னம் அபார வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் பதவிக் காலம் வரும் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியைச் சேர்ந்த காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்றிரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிங்கப்பூரின் 9வது அதிபராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரியத் தலைவராகவும் இவர் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.