செய்திகள்

ஆளுநர் காலில் விழுந்து வழியனுப்பிய முதல்வர்!

கல்கி டெஸ்க்

ந்திர மாநிலத்தின் ஆளுநராக பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரன் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரை சட்டீஸ்கர் மாநில ஆளுநராகவும், ஆந்திர மாநிலத்துக்கு புதிய ஆளுநராக அப்துல் நசீரை நியமித்தும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து ஆந்திர மாநில ஆளுநராகப் பணியாற்றிய பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரனுக்கு வழியனுப்பும் விழா நேற்று விஜயவாடா அமராவதி கன்னாவரம் விமான நிலையத்தில் நடைபெற்றது. முன்னதாக அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரனுக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பியதோடு, அவரது காலில் விழுந்தும் ஆசி பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக அப்துல் நசீர் பதவி ஏற்க உள்ளார். இவர் நேற்று விஜயவாடா வந்து சேர்ந்தார். அவரை கன்னாவரம் விமான நிலையத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்றார். நாளை ராஜ்பவனில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அப்துல்நசீர் ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராகப் பதவி ஏற்க உள்ளார்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்நசீர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றாமல், நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி இவர் ஆவார். கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து இவர் ஓய்வு பெற்றார். புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஆந்திர மாநில ராஜ்பவனில் நடைபெற்று வருகின்றன.

நமது தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் நடைபெற்று வரும் பனிப்போரை பார்க்கையில், அண்டை மாநிலமான ஆந்திராவில் நிகழும் இந்த முதல்வர்-ஆளுநர் அன்பான உறவு நம்மை கொஞ்சம் பொறாமை கொள்ளத்தான் செய்கிறது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT