செய்திகள்

முத்திரை திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் ஆய்வுக் கூட்டம்!

கல்கி டெஸ்க்

மிழகத்தில் முத்திரை திட்டங்கள் (Iconic Projects) குறித்த முதற்கட்ட ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “முத்திரைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த முதல் கட்ட ஆய்வுக் கூட்டத்தினை இன்று நடத்தி முடித்திருக்கிறோம். இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் செயலாக்கத்தில் காணப்படக்கூடிய சில சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விவாதித்தோம்.

இதுபோன்ற ஒரு ஆய்வுக் கூட்டத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தி, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அடையாளம் காணப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை, ‘அரசின் முத்திரை திட்டங்கள்’ என வகைப்படுத்தி, அந்தத் திட்டங்களை விரைந்து முடித்திட உங்கள் அனைவரையும் நான் ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அத்திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும், முடிப்பதற்காக நீங்கள் நிர்ணயித்த இலக்குகளையும், நீங்கள் அனைவரும் நினைவில் நிறுத்தி அதன்படி பல திட்டங்களை முடித்து செயலாக்கத்திற்கு கொண்டு வந்துள்ளதை நான் இந்தத் தருணத்தில் பாராட்டுகிறேன்.

தற்போது இரண்டாம் கட்டமாக, அந்தத் திட்டங்களோடு மட்டுமல்லாது, மேலும் பல புதிய திட்டங்களையும் இணைத்து, இன்றைய தினம் 11 துறைகளுடன் விரிவாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆய்வுக் கூட்டத்துடன் இந்த ஆய்வுக் கூட்டத்தினை ஒப்பிடும்போது பெரும்பாலான திட்டங்களில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டாலும், சில திட்டங்களில் கவனம் தேவைப்படுகிறது என்பதனை இந்த நீண்ட ஆய்வுக்குப் பிறகு நீங்களே தெளிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள். தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும் திட்டங்கள், எதிர்பார்த்த காலக்கட்டத்திற்கு முன்பே செயலாக்கத்திற்கு வந்துவிடும் என்பதற்கு உதாரணமாக, நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மாநகரில் விரைவில் திறப்பு விழாவினை எதிர்நோக்கி இருக்கும் கலைஞர் நினைவு நூலகம் திட்டங்கள் சிறப்பான உதாரணங்களாக அமைந்திருக்கிறது.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல நம்முடைய இலக்கு தேசிய அளவில் முதலிடத்தை பெறுவது மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் தலைசிறந்து விளங்கவும் இத்தகைய ஆய்வுக் கூட்டங்கள் சிறப்பான வாய்ப்பாக நான் கருதுகிறேன். ஒரு திட்டத்தின் வெற்றிக்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். அத்தகைய ஒருங்கிணைப்பினை உறுதி செய்ய இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் உங்களைப் போன்ற அரசின் உயர் அலுவலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்பது விரைந்து முடிக்கப்பட்ட திட்டங்களின் மூலம் அறிய முடிகிறது. அதேசமயத்தில், இந்த ஆய்வுக் கூட்டத்தின் மூலம் இன்னும் சில திட்டங்களின் முன்னேற்றம் தொய்வாக உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தத் திட்டங்கள் விரைந்து முடிக்கப்படாவிட்டால் அவற்றின் முன்னேற்றம் மிக விரைவில் வரவிருக்கின்ற பருவமழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளினால் மிகவும் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பருவமழை தாண்டிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும், அடுத்து வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிகள் போன்ற சூழ்நிலைகளால் பணிகளின் முன்னேற்றம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது. எனவே, உங்களுக்கு திட்டங்களை விரைந்து முடிக்க வரவிருக்கின்ற நான்கு, ஐந்து மாதங்களே வாய்ப்பான காலமாக உள்ளது. ஆகவே, சரியான திட்டமிடுதலுடனும், உரிய வழிகாட்டுதலுடனும் திட்டங்களை நீங்கள் அணுகினால், வரவிருக்கின்ற நான்கு, ஐந்து மாதங்கள் மாநிலத்தினுடைய பொற்கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட வலுவான காலங்களாக மாறும் என்பது உறுதி” என்று பேசி உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதநிதி ஸ்டாலின், முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கா.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், மருத்துவர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிக்கனமும் சேமிப்பும் வீட்டின் இரு கண்கள்!

நகங்களை வலிமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் பாடம் புகட்டிய சிவபெருமான்!

தனிமையில் வாழும் ஹெர்ட்ஸ் திமிங்கலங்கள்… என்ன காரணம்?

ஐந்து நிலை கோபுரங்களை கொண்ட கந்தகோட்டம் கந்தசாமி கோவில்!

SCROLL FOR NEXT