செய்திகள்

2030ல் பூமியில் விழப்போகும் சர்வதேச விண்வெளி நிலையம்.

கிரி கணபதி

விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுவது சர்வதேச விண்வெளி நிலையமாகும்.  இது இன்னும் எட்டு ஆண்டுகளில் தனது இயக்கத்தை முடித்துக்கொள்ளப் போவதாக நாசா அண்மையில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய ஐந்து விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் 1998ஆம் ஆண்டு விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டு, விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. சாதாரணமாக இருந்த இந்த நிலையம், பின்னர் வெப்பத்தை வெளியேற்றும் ரேடர்கள் மற்றும் சோலார் பேனல்கள் என பதினாறு தொகுதிகளைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவெடுத்தது. 

356 அடி நீளத்தில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரியதாகவும், சுமார் 400 டன் எடையுடன், இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளில் மிகப்பெரியது என்ற பெருமையை இந்த விண்வெளி நிலையம் பெற்றுள்ளது.  ரஷ்யாவின் சல்யூட் 7, அமெரிக்காவின் ஸ்கைலைஃப் ஆகிய விண்வெளி நிலையங்களோடு ஒப்பிடும்போது, இந்த இன்டர்நேஷனல் விண்வெளி நிலையம்தான் பெரியதாகும். 

இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் முக்கியமானவற்றில் பல வன்பொருட்கள் அடங்கும். இது பல ஆண்டுகள் பழமையானவையாக உள்ளது. தொடர்ச்சியான இயக்கத்தினால் இந்த விண்வெளி நிலையத்தின் வன்பொருட்களில் பிரச்சனை ஏற்பட்டு தன் கட்டுப்பாட்டை இழந்து, சுற்றுப்பாதையிலிருந்து விலகிச் செல்லும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் விண்வெளியில் பல ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், 2030க்கு பிறகும் இதன் செயல்பாட்டை சுமூகமாக மேற்கொள்வது குறித்து ஆராய்ச்சியாளர்கள் யோசித்து வருகின்றனர். 

மேலும் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை யாருக்கும் பாதகம் இல்லாமல் செயலிழக்க வைக்கும் பணிகள் 2026 இல் தொடங்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக இதன் சுற்றுப் பாதையானது பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து தானாக விலகுவதற்கு அனுமதிக்கப்படும் என்கின்றனர். தற்போது பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்வெளி நிலையம் அமைந்துள்ளது. 2030 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த உயரத்தை 320 கிலோமீட்டர் ஆக குறைத்து, போகப்போக 280 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தி, இறுதியாக பிரத்யேக விண்கலத்தின் உதவியுடன் 120 கிலோமீட்டரா குறைக்க திட்ட மிட்டுள்ளனர். 

அவ்வாறு விண்வெளி நிலையமானது 120 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டுவரப்பட்டால், அப்போது அது வளிமண்டலத்தில் 29 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் அபாயகரமாக தாக்கும் என்றும், இதனால் விண்வெளி நிலையத்தின் சோலார் பேனல்கள், ரேடர்கள் உள்ளிட்டவை தானாகவே பெயர்ந்து விழ வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

இந்த மிகப்பெரிய சர்வதேச விண்வெளி நிலையமானது தானாக தனது கட்டுப்பாட்டை இழந்து செயலிழக்க நேரிட்டால், இதனால் உண்டாகும் விண்வெளி குப்பைகள் சுமார் 6000 கிலோமீட்டர் வரை பரவும் அபாயம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதை செயலிழக்கச் செய்யும்போது மிகவும் கவனமாக கையாள வேண்டும். அதை சரியாக பசிபிக் பெருங்கடலில் விழும்படி செயல்படுத்த வேண்டும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

SCROLL FOR NEXT