இந்திய நாடாளுமன்றத்தின் புதியக் கட்டடம் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்தப் புதிய கட்டடத்தை வரும் 28ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர்தான் இந்தக் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
அதைத் தொடர்ந்து நேற்று, ‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரைக் கொண்டுதான் திறக்க வேண்டும்’ என்று ஜெய் சுகேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ‘நாடாளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும், கட்டடத் திறப்பையும் எப்படித் தொடர்புப்படுத்த முடியும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கின்றனர். இந்த உத்தரவின்படி நாடாளுமன்ற புதியக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதில் எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.