செய்திகள்

எடியூரப்பா பிரதமர் மோடியுடனான சந்திப்பின் ரகசியம் இதுதானா?

ஜெ.ராகவன்

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

எனினும் மாநிலம் முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் மீண்டும் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவதே தமது லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் இப்போதிலிருந்தே தேர்தல் களத்துக்கு தயாராகி வருகின்றன.

கர்நாடகத்தில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என்று கூறியுள்ள அமித்ஷா, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 136 தொகுதிகளை எப்படியாவது வென்றெடுக்க வேண்டும் என்று மாநில

பா.ஜ.க.வினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்த முறை காங்கிரஸ் மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில் பா.ஜ.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

எடியூரப்பாவுக்கு பிறகு பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றாலும் அவருக்கு பெரிய செல்வாக்கு ஒன்றும் இல்லை. மேலும் அவருக்கு நல்ல பெயரும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

பசவராஜ் பொம்மை பதவியேற்றதிலிருந்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அவரை எல்லோரும் 40% கமிஷன் முதல்வர் என்றே கூறிவருகின்றனர்.

கர்நாடக பா.ஜ.க.விலிருந்து வயதை காரணம்காட்டி எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டாலும் அவர் கட்சியின் நாடாளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். மேலும் கர்நாடகத்தில் லிங்காயத்து சமூகத்தினருக்கு இடையே அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தில்லி சென்ற எடியூரப்பாவை பிரதமர் மோடி தனியாகச் சந்தித்துப் பேசினார்.

மீண்டும் எடியூரப்பாவை மாநில அரசியலில் களம் இறக்கி வெற்றிக்கனியை பறிக்கலாம் என பா.ஜ.க. கருதுவதாகத் தெரிகிறது. அதன் காரணமாகவே மோடி, எடியூரப்பாவுடன் ரகசிய பேச்சு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே பெலகாவியில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவரான எடியூரப்பா, “நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக இல்லை. நான் ஏற்கெனவே எம்.எல்.ஏ. பதவியையும் முதல்வர் பதவியையும் ராஜிநாமா செய்துவிட்டேன். எனக்கு 80 வயதாகிவிட்டது. தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து கட்சிக்காக தீவிர பிரசாரத்தில ஈடுபடுவேன். மீண்டும் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவதே எனது லட்சியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தமது மகன் விஜயேந்திராவை களத்தில் இறக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

இராமாயண பெருமை பேசும் வால்மீகி பவன் எங்கிருக்கிறது தெரியுமா?

SCROLL FOR NEXT