தொடர்ந்து பிரபலங்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது டைட்டானிக் ஹீரோவும் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதே அந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்கவிருந்த நிலையில், அவர் சில காலத்திற்கு முன்னர், போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார்.
இதனால், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே காரசாரமான விவாதங்கள் எழுந்தன. மேலும் இருவருக்கும் குறிப்பிட்ட சில சம்பவங்களும் நடந்தன. அதாவது ட்ரம்பை பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்ல முயற்சித்தனர். இதனால் அவர் நூழிலையில் உயிர் தப்பினார். அதேபோல், கமலா ஹாரிஸுக்கு அவர் அணிந்த கம்மலால்கூட சர்ச்சை உண்டானது. கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது அவருக்கு பெரும் பலமாக இருந்து வருகிறது. கமலா ஹாரிஸுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அவருக்கு ஆதரவாக இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் பரப்புரையில் களமிறங்க உள்ளார், அவர் தன்னுடைய இசை மூலமாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட உள்ளார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதுகுறித்தான எந்த தகவலும் இல்லை.
இதுபோல கமலா ஹாரிஸுக்கு சில பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாடகி டெய்லர் ஷிப்ட் போன்றோர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
ஆனாலுமே கமலா ஹாரிஸ் பின்தங்கி இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.
இந்தநிலையில்தான் டைட்டானிக் பட ஹீரோ லியோனார்டோ டி காப்ரியோ கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதாவது இந்த மாத தொடக்கத்தில் ப்ளோரிடா, ஜார்ஜியா, வட கரோலினா பகுதிகளில் ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளியால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
அதி சக்தி வாய்ந்த இந்த அட்லாடிக் சூறாவளியால் மக்கள் தங்களின் வீடுகளையும் உறவுகளையும் இழந்துள்ளனர். 100 பில்லியன் டாலர் வரை சேதங்களை ஏற்படுத்திய இந்த அசாதாரணமான சூறாவளி காலநிலை மாற்றத்தின் விளைவே. ஆனால் டிரம்ப் காலநிலை மாற்றத்தை தொடர்ந்து மறுக்கிறார்.
அறிவியலையே அவர் மறுக்கிறார். பாரிஸ் காலநிலை தீர்மானத்திலிருந்து அமெரிக்காவை அவர் பின்வாங்கச் செய்தார். காலநிலை மாற்றம் நமது பூமியையும் பொருளாதாரத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள நாம் செயலாற்றியாக வேண்டும். அதனால்தான் நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கிறேன்.” என்று பேசியுள்ளார்.