ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்து, போக்குவரத்து காவல்துறையினரிடம் பிடிபடுபவர்களுக்கு முதலில் ஏற்படும் உடல்நலக்குறைவுதான். அதிக ரத்த அழுத்தம், படபடப்பு, வியர்த்து வழியும் முகத்தோடு சிக்னலில் காவல்துறையினரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பவர்களை சென்னை மாநகரத்தில் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து விதி மீறல்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. தெருவோரம் சி.சி.டி.வி வைக்கப்பட்டிருந்தாலும் விதி மீறலில் ஈடுபட்டு அபராதம் கட்டுபவர்களும் அதிகமாகிவருகிறார்கள்.
கண்மூடித்தனமாக வேகத்தில் வாகனங்களை இயக்குபவர்கள். ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்கள் என பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முன்பு போல் அபராதத் தொகை, பணமாக பெறப்படுவதில்லை. டிஜிட்டல் பணபரிவர்த்தனையின் மூலமாகவே அபராதம் செலுத்தப்படுகிறது.
பே.டி.எம் கியூ. ஆர்.கோடு மூலமாகவும் ஏ.டி.எம். கார்டு மூலமாகவும் அபராத தொகையை வசூலிக்கிறார்கள். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அனைத்து கார்டுகளும் ஏற்கப்படுகின்றன. செக் மூலமாகவும் அபராத தொகையை கட்டலாம்.
கையில் பணம் இல்லையென்றால் அபராத ரசீது வழங்கப்படும். வீட்டுக்கு திரும்பியதும் ஆன்லைனில் பணத்தை கட்டிவிடலாம். ஒரு சிலர் ஆன்லைனில் பணம் கட்டுவதை மறந்துவிடுவதால் போக்குவரத்து காவல்துறையினர் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
இதற்காக போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து, சம்பந்தப்பட்டவர்களை நேரில் வரவழைத்து அபராத தொகையை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகாம்களில் அதிக அபராத தொகையை வசூலிக்கும் காவல்துறையினருக்கு பாராட்டு பத்திரமும் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ அல்லது காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றாலோ ரூ.1,000, பைக் ரேஸில் ஈடுபட்டால் முதல் முறை ரூ.5,000, அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.10,000 அபராதம் வசூலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
300 ரூபாய் ஹெல்மெட்டை துறந்து பயணித்தால் ஆயிரம் ரூபாயை இழக்க வேண்டியிருக்கும். விபத்து நேர்ந்தால் உயிருக்கும் உத்திரவாதமில்லை. ஆகவே, பயணத்தின்போது ஹெல்மெட் தேவையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.