செய்திகள்

பன்னிரண்டு மணி நேர வேலை மசோதா திரும்பப்பெறப்படுகிறது: முதலமைச்சர் அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

மே,1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ’'தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். உயிரிழந்த தொழிலாளர்களுக்கு வீர வணக்கம். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் 1889ம் ஆண்டு கூடி மே, 1ம் தேதியை உலக தொழிலாளர் வர்க்க நாளாக அறிவித்தனர். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் முதலாவது மே தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது. சோவியத் சென்று வந்த பிறகு பெரியாரும் மே தினத்தைக் கொண்டாடத் தொடங்கினார்.

1969ம் ஆண்டு கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றதும் தொழிலாளர் நலத்துறையை உருவாக்கினார். மே முதல் நாளை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக  அறிவித்தார். அதோடு, தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதுகாப்புக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். 1990ம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்தப் பூங்காவுக்கு, ’மே தின பூங்கா’ என பெயர் வைத்தவரும் கருணாநிதிதான். அரசாங்கம் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில், ’எல்லாருக்கும் எல்லாம்’ என்றபடி திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளில் ஆறு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில் சர்ச்சைக்குரிய சட்டமுன்வடிவு ஒன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெருமுதலீடுகளை ஈர்க்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவே அந்த சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது. அனைத்துத் தொழிற்சாலைகளுக்குமான சட்டமுன்வடிவு அல்ல அது. அதில் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் அம்சங்கள் பல இருந்தன. ஆனால், அதில் சில சந்தேகங்கள் தொழிற்சங்கங்களுக்கு இருந்தன. திமுக தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்காகப் பாராட்டுகிறேன். உடனடியாக அனைத்துத் தொழிற்சங்க தோழர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அதனை திரும்பப் பெற்றுள்ளதுதான் திமுக அரசு. இதனை அவமானமாகக் கருதவில்லை. பெருமைப்படுகிறேன். அந்த சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ள செய்தி விரைவில் தெரிவிக்கப்படும்” என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவப்பு நிற சட்டை அணிந்து வந்திருந்தார். மேலும், ஆண்கள் சிவப்புச் சட்டை அணிந்தும், பெண்கள் சிவப்பு நிறப் புடவை அணிந்தும் வருகை தந்திருந்தனர். இந்த நிக்ழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT