மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரைக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரமுகர்களும் தொண்டர்களும் வருகிறார்கள். தற்போது கோவிட்-19 தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் ராகுல் யாத்திரை நடத்துவது கவலை அளிக்கிறது.
எனவே ராகுல் உள்பட யாத்திரையில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிகிறார்களா, ரசாயன திரவம் கொண்டு அவ்வப்போது கைகளை கழுவுகிறார்களா மற்றும் கோவிட் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி ராஜஸ்தானைச் சேர்ந்த எம்..பி.க்கள் பி.பி.செளதுரி, நிஹால் சந்த் மற்றும் தேவிஜி படேல் ஆகியோர் மத்திய சுகாதா அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவருக்குமே மத்திய அமைச்சரிடமிருந்து கடிதம் பறந்துள்ளது.
அந்த கடிதத்தில் அமைச்சர் மாண்டவியா, ஒற்றுமை யாத்திரையில் கோவிட் விதிமுறைகள் பின்பற்றப்படாதது குறித்து “உங்கள் மாநில எம்.பி.க்கள் மூன்று பேர் கவலை வெளியிட்டுள்ளனர். யாத்திரை நடத்துவதாக இருந்தால் கோவிட் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றுங்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டும் யாத்திரையில் பயணிக்கச் செய்யுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் யாத்திரையை நிறுத்திவிடுகள்” என்று தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை யாத்திரை இப்போது ஹரியாணாவுக்குள் நுழைந்துள்ளது.
ராகுலின் யாத்திரையில் பங்கேற்ற பலருக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், இந்த யாத்திரையில் பங்கேற்ற இமாச்சல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் அந்த எம்.பி.க்கள் தங்கள் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தனர்.
இதனிடையே மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ள ஆதிர் ரஞ்சன் செளதுரி, ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு நாடு முழுவதிலிருந்தும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் இதை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்தாரே அவர் முகக்கவசம் அணிந்தாரா அல்லது கோவிட் விதமுறைகளை பின்பற்றினாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைதான் அரசின் கண்ணுக்குத் தெரிகிறதா? ராஜஸ்தான் மற்றும் கர்நாடகத்தில் பா.ஜ.க. பேரணி நடத்திவருவது தெரியவில்லையா? கோவிட் அச்சுறுத்தலை காரணம் காட்டி நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள தயாரா என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க. தலைவர் சதீஷ் புனியா தலைமையில் “ஜன ஆக்ரோஷ் யாத்திரை” நடைபெறுகிறதே? அவர்களுக்கும் இதுபோல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேட்டுள்ளார்.