போக்குவரத்து விதிமீறல்களை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகமாக உள்ளது. இதனால் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்கின்றனர்.
சில ஹாலிவுட் திரைப்படங்களில் போலீசார் வாகனங்களின் மீது ரேடார் கருவி போல ஒரு அம்சம் பொருத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். 4D இமேஜிங் ரேடார் எனப்படும் இந்த புதிய தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த தொழில்நுட்பம் முதல் முறையாக பிகார் மாநிலத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை சிறப்பாகக் கண்காணிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இப்போது பயன்படுத்தப்படும் காணொளி அடிப்படையிலான தொழில்நுட்பங்களை விட துல்லியமான தகவல்களை இந்த புதிய தொழில்நுட்பம் கொடுக்கவல்லது.
விதியை மீறும் வாகனங்களை துல்லியமாகக் கண்டறிந்து அந்த தகவல்களை சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த தொழில்நுட்பத்தை போக்குவரத்து துறையினரின் வாகனங்களின் மேல் கூட பொருத்திக் கொள்ளலாம்.
இந்த சாதனத்தைப் பயன்படுத்தி வேகமாக வாகனத்தை செலுத்துவோரை மட்டுமின்றி, தவறான வழிகளில் செல்வது, இருசக்கர வாகனத்தில் ட்ரிபிள் போவது போன்ற விதிமீறல்களை கண்காணித்து, அவர்களின் வாகன எண்ணை தானாகவே படம் எடுத்து சேமித்து வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
பீகார் நெடுஞ்சாலைகளில் அதிகப்படியான விதிமீறல் மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடப்பதால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக பீகாரில் மொத்தமாக ஏற்படும் விபத்துகளில் சுமார் 44 சதவீதம் விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் நடக்கிறது என்பதால், இந்தத் தொழில்நுட்பம் சாலை விபத்துகளையும் குறைக்கும் என்கின்றனர்.
அதன் பிறகு இத்தகைய சென்சார் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் இந்தியா முழுவதிலும் எல்லா இடங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக பொருத்தப்படும். இனி சாலை விதிமுறை மீறல்களிலிருந்து யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.