5G network 
அறிவியல் / தொழில்நுட்பம்

5G வலைப்பின்னல்!

என். சொக்கன்

இப்போதெல்லாம் எல்லாத் தொலைபேசி விளம்பரங்களிலும் '5G வசதி கொண்டது' என்று அறிவிக்கிறார்கள். தொலைதொடர்புச் சேவை வழங்குநர்கள் தங்களுடைய 5G வலைப்பின்னல்தான் மிகச் சிறந்தது, மிக விரைவானது என்று போட்டி போடுகிறார்கள். அதென்ன 5G?

நாம் சில ஆண்டுகளுக்குமுன்புதான் 2G, 3G, 4G வலைப்பின்னல்களை ஒவ்வொன்றாகத் தாண்டிவந்தோம். அதனால் G என்பது Generation, அதாவது தலைமுறையைக் குறிக்கிறது என்பதும் 5G என்பது ஐந்தாம் தலைமுறைக்கான தொலைதொடர்பு வலைப்பின்னல் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால், 5G என்பது உண்மையில் என்ன என்பதுதான் யாருக்கும் எளிதில் தெரியாது. சொல்லப்போனால், 5G வசதி உள்ள தொலைபேசி வைத்திருக்கிறவர்கள், அதில் 5G சேவையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டவர்களால்கூட நான்காம் தலைமுறைக்கும் ஐந்தாம் தலைமுறைக்கும் என்ன வேறுபாடு என்பதைத் துல்லியமாக எடுத்துக்காட்ட இயலாது.

ஏனெனில், 5G தொழில்நுட்பத்தின் நோக்கங்கள், அடுத்த தலைமுறைக்கான கருவிகளை இன்னும் நன்றாக, இன்னும் விரைவாக, பிசிறில்லாமல் இணைத்தல், புதிய பயனர் அனுபவங்களை வழங்குதல், புதிய அனுப்பல் மாதிரிகளுக்கு ஆற்றலளித்தல், புதிய சேவைகளை வழங்குதல். அதனால், நாம் ஏற்கெனவே செய்துகொண்டிருந்த மின்னஞ்சல், அரட்டை, வீடியோ அழைப்புகள், பதிவேற்றம், பதிவிறக்கம் ஆகியவற்றை இது முன்பைவிட நன்றாகச் செய்தாலும், இனி செய்யப்போகிற புதிய விஷயங்களில்தான் இதன் சிறப்பு வெளிப்படும். இந்தப் புதிய விஷயங்கள் முந்தைய தலைமுறை வலைப்பின்னல்களில் சாத்தியமாகியிருக்காது என்பதுதான் விஷயம்.

இதைப் புரிந்துகொள்வதற்குச் சாலைகளை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒற்றையடிப் பாதைகளில் தொடங்கி மண் சாலை, தார்ச்சாலை என்று நாம் முன்னேறிவந்திருக்கிறோம். இன்றைய சாலைகள் மிகச் சிறப்பாகவும் உறுதியுடனும் பாதுகாப்பாகவும் அமைக்கப்பட்டிருப்பதால், அதில் பயணம் செய்கிற வண்டிகளின் தன்மையும் விரைவு வேகமும் சிறப்பும் கூடுகிறதில்லையா? இவ்வளவு நல்ல சாலைகள் வராதவரை இவ்வளவு நல்ல வண்டிகள் அறிமுகமாவதற்கு வாய்ப்பு இல்லை. தொழில்நுட்பத்தில் அப்படி ஒரு புரட்சியைத்தான் 5G வலைப்பின்னல் கொண்டுவந்துகொண்டிருக்கிறது. இதனால் கிடைத்திருக்கும் உயர்விரைவு, மேம்பட்ட நம்பகத்தன்மை, குறைந்த தாமதத்தன்மை உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு ஏராளமான பழைய, புதிய கருவிகள் முன்பைவிடச் சிறப்பாக ஒன்றோடொன்று பேசுகின்றன. முன்பைவிடச் சிறப்பான, நுட்பமான வழிகளில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

5G வலைப்பின்னலின் இன்னொரு சிறப்பும் உண்டு. இது மென்பொருள் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் இப்படிப்பட்ட வலைப்பின்னல்தான் கிடைக்கும், அதற்குமேல் கிடைக்கவேண்டுமென்றால் கூடுதல் கருவிகளை நிறுவவேண்டும் என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்காது. பயனர்கள், கருவிகளின் அடிப்படையில் புதிய வலைப்பின்னல் துண்டுகளை உருவாக்கிக்கொள்ளலாம், அதன்மூலம் சேவையளவைத் தேவைக்கேற்ப ஏற்றி இறக்கலாம்.

இதனால், நம்மைப்போன்ற தனிநபர்கள் மட்டுமின்றி, நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசாங்கங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் போன்றவையும் 5G வலைப்பின்னலைப் பயன்படுத்தித் தங்களுடைய சேவைகளை மேம்படுத்தலாம். நாளைய மென்பொருள், வன்பொருள் தீர்வுகள் அனைத்தும் இந்த வலைப்பின்னலை அடித்தளமாகக் கொண்டுதான் சிந்திக்கப்படும், அது நம் வாழ்க்கையை நன்முறையில் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே இந்தியாவில் பல இடங்களில் 5G வலைப்பின்னல்கள் கிடைக்கத் தொடங்கிவிட்டன. அந்த வசதி கொண்ட செல்ஃபோன் வைத்திருப்பவர்கள் இப்போதே அதைப் பயன்படுத்திப்பார்க்கலாம். 4Gயில் அதிகபட்சம் விநாடிக்கு 1GB என்று இருந்த விரைவு 5Gயில் 20GBயாக எகிறியிருப்பதால், அந்த மாறுபாட்டை நாம் உணரலாம். ஆனால், இது ஒரு சிறு தொடக்கம்தான். அதன் முழுமையான பலன்கள் இனி நமக்குக் கிடைக்கப்போகும் சேவைகளின்மூலம்தான் கிடைக்கும். அதாவது, 5Gயின் சிறப்பு விரைவைக் கூட்டுவதில் மட்டும் இல்லை, வாய்ப்புகளை விரிவாக்குவதில்தான் இருக்கிறது.

5G சரி, 6G எப்போது?

அதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. பல பெரிய நிறுவனங்களும் ஆராய்ச்சி அமைப்புகளும் ஆறாம் தலைமுறை வலைப்பின்னலுக்கான தரநிலைகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். அது, தொலைதொடர்பை இன்னும் பெரிய தளங்களுக்குக் கொண்டுசெல்வது உறுதி.

நீங்க எல்லாரும் புரதத்தை தவறான நேரத்தில் சாப்பிடுறீங்க! 

முத்தான 10 பயனுள்ள சமையல் டிப்ஸ்!

அதிக நேரம் உடற்பயிற்சி செய்தவர் மரணம்: ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

ஹேண்ட்பேக் வாங்க போறீங்களா? அப்ப இதை கவனிங்க..!

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இந்தியா!

SCROLL FOR NEXT