AI மூலமாக பல புதிய படைப்புகளும், கருவிகளும் உருவாக்கப்பட்டு நம்மை கவர்ந்து வரும் நிலையில், சிலர் இதை சரியாக பயன்படுத்தி இலட்சக்கணக்கில் பணம் ஈட்டி வருகின்றனர். அப்படிதான் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் மாதம் 9 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
நாம் என்னவெல்லாம் நினைக்கிறோமோ அதை உண்மையாகவே காட்டும் ஆற்றல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு உள்ளது. இதனால் நன்மை, தீமை என இரண்டுமே இருந்தாலும், சரியாக பயன்படுத்தினால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான சான்றாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ‘பென் க்ரூஸ்’ என்பவர் திகழ்கிறார். இவர் ஒரு டிசைனர். தனது சொந்த நிறுவனமான The Clueless-உடன் இணைந்து உருவாக்கிய AI மாடல் தற்போது இணையத்தில் கலக்கி வருகிறது.
இதுகுறித்து அவர் சொல்லும்போது, “மனிதர்களுடைய மனநிலை பல விதமாக உள்ளது. மாடலிங் துறையில் சிலர் பணம் சம்பாதிக்க மட்டுமே வருகிறார்கள். இதில் சிலருக்கு ஈகோ பிரச்சனை இருக்கும். சிலர் நம்மை எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொள்வார்கள். இத்தகைய மனிதர்களை கையாள்வது கடினம் என்பதை உணர்ந்தபோதுதான் இந்த யோசனை எனக்கு வந்தது. நாம் ஏன் AI மூலமாக ஒரு மாடலை உருவாக்கக் கூடாது? என்று. இதுதான் என்னை Aitana Lopez என்ற பெண் AI மாடலை உருவாக்க வைத்தது” என அவர் கூறினார்.
முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தத்ரூபமான இந்தப் பெண் மாடல், மாதம் 10000 யூரோக்கள் சம்பாதிக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் மாதம் 9 லட்சம் ரூபாய். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் இந்த ஏஐ மாடலுக்கு இதுவரை 1.5 லட்சம் பின்தொடர்பவர்கள் குவிந்துள்ளனர். முதல் முறையாக இந்த மாடலை இணையத்தில் பார்ப்பவர்கள், இது ஒரு செயற்கையான பெண் என நினைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தட்ரூபமான தோற்றத்துடன் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் முதல் செலிப்ரட்டிகள் வரை Aitana Lopez-ஐ வெளியே அழைத்து செல்ல விருப்பம் தெரிவிப்பதாக இன்ஸ்டாகிராமில் மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதைப் பயன்படுத்தி ஏஐ டூல்கள் மற்றும் போட்டோஷாப் வாயிலாக பல பிராண்டுகள் விளம்பரம் தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.