ஆப்பிள் நிறுவனத்தால் இந்த ஆண்டு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஆப் டெவலப்மென்ட் சவாலில் வெற்றி பெற்ற நபர்களில், இந்தியாவின் அஸ்மி ஜெயின் என்ற மாணவியும் ஒருவர்.
ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக ஸ்விப்ட் மாணவர் சவாலை வென்ற பல மாணவர்களில் ஒருவரான இந்தூரின் அஸ்மி ஜெயின், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது பணியால், உலகில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தத் தயாராக உள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
20 வயதான, அஸ்மி ஜெயின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள மெடி கேப்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் கண் அசைவுகளைக் கண்காணிக்க ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்விப்ட் டெவலப்பர் சேலஞ்சில் அஸ்மி ஜெயின் உருவாக்கிய 'ஐ ட்ராக்' செயலியும் வெற்றிப் பட்டியலில் இடம் பெற்றது.
"உலகின் எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி, சிறந்த யோசனைகளை உயிர்பிக்க செய்வதும் எங்கள் நோக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் புதுமையான iOS டெவலப்பர் சமூகத்தைச் சேர்ந்த பலரை சந்திக்க எனக்கு நேரம் கிடைத்தது. இதில் அஸ்மி ஜெயினின் அபாரமான பணி இந்த நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தை எடுத்துக்காட்டுகிறது. மக்களின் ஆரோக்கியத்திற்கு உதவுவதன் மூலம், உலகில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த அவர் ஏற்கனவே தயாராக இருக்கிறார். மேலும் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம்" என அஸ்மி ஜெயினுடனான மெய்நிகர் சந்திப்பிற்குப் பிறகு டிம் குக் கூறினார்.
ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த போட்டியில் உருவாக்கும் செயலிகள் விளையாட்டு, சுகாதாரம், பொழுதுபோக்கு, சுற்றுச்சூழல் ஆகிய தலைப்புகளின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆப்பிள் ஸ்விப்ட் ஸ்டூடண்ட்ஸ் சேலஞ்ச் போட்டி உலகம் முழுவதும் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா தரப்பில் வெற்றி பெற்ற மாணவிதான் அஸ்மி ஜெயின்.
இவர் உருவாக்கிய ஆப் மூலமாக பார்வைத்திறன் குறைபாடுள்ள நபரின் கண் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு சரியான சிகிச்சையளித்து பார்வையை மீட்க உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.