புதிய எலக்ட்ரிக் வாகனக் கொள்கை 2.0-ன் படி, எலக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு 'ரெட்ரோபிட்டிங்' என்ற பழைய வாகனத்தை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றிக் கொள்ளும் முறை ஊக்குவிக்கப்படலாம் என டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் " பழைய பெட்ரோல் டீசல் வாகனங்களை மின்சாரக் கார்களாக மாற்ற விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளலாம். ஒரு ஜிப்ஸி வாகனத்தை எலக்ட்ரிக் வாகனமாக மாற்ற சுமார் 5 முதல் 6 லட்சங்கள் வரை செலவாகலாம். இது மிக அதிகமான தொகைதான் என்றாலும், மக்களின் விருப்பம் மற்றும் அவர்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு, அதற்கான புதிய கொள்கையை கொண்டு வருவது குறித்து பேசி வருகிறோம்" என அவர் கூறியிருந்தார்.
ரெட்ரோ பிட்டிங் என்பது டீசல் அல்லது பெட்ரோல் கார்களை ஒரு மின்சார வாகனமாக மாற்றும் செயல்முறையாகும். இத்தகைய செயல்பாட்டில் டீசல் அல்லது பெட்ரோல் இன்ஜின் முற்றிலுமாக அகற்றப்பட்டு அதற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் அதை இயக்கும்படியான பேட்டரி பொருத்தப்படும். அதுமட்டுமின்றி, வாகனத்தில் கூடுதலாக பிரேக்கிங் சிஸ்டம், சார்ஜிங் சிஸ்டம், பவர் சிஸ்டம் போன்ற எலக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான பல மாற்றங்களும் செய்யப்படும். இது தவிர காரின் வெளிப்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
இதற்கான செலவுகள் என்று பார்க்கும்போது காரின் நிலை, பேட்டரி செலவு, மின்சார மோட்டார், அதை பொருத்துவதற்கான செலவு என மொத்தமாக 5 லட்சங்கள் வரை செலவாகலாம். ஆனால் புதிதாக ஒரு எலக்ட்ரிக் வாகனம் வாங்குவதை விட இந்த செலவு குறைவு என்பதால், பல நிறுவனங்கள் தற்போது பழைய வாகனங்களை EV வாகனமாக மறுசீரமைத்துத் தருகின்றனர். இனிவரும் காலங்களில், பெட்ரோல் டீசல் வாகனங்களை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றும் செயல்முறை மிக எளிதாக மாறிவிட வாய்ப்புள்ளது.
இப்போது இதை ஊக்குவிக்கும் நோக்கில் டெல்லி அரசாங்கமும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவது வரவேற்கக் கூடியதாக உள்ளது.