கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் போலி பார்சல் மோசடி அதிகரித்து வருகிறது. இந்த ஆன்லைன் மோசடியில் இதுவரை பலர் பல லட்சங்களை இழந்துள்ளனர். இந்த மோசடி எப்படி நடக்கிறது என்பது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
போலி பார்சல் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மோசடிக்காரர்கள், சோசியல் மீடியா பிளாட்பார்ம் மூலமாகவோ, WhatsApp அல்லது மொபைல் நம்பர் மூலமாகவோ அவர்களை அணுகுகின்றனர். பின்னர் நாங்கள் போதைப் பொருள் தடுப்பு பிரிவிலிருந்து பேசுகிறோம். உங்களது பெயரில் போதைப்பொருள், போலி பாஸ்போர்ட் அல்லது சட்டத்திற்கு புறம்பான ஏதோ ஒரு போலி பார்சல் வந்திருப்பதாக அவர்களிடம் கூறுகின்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட நபரின் உறவினரின் பெயரைச் சொல்லி அவர் தங்களுடன் இருப்பதாகவும், இந்த கடத்தலுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் சொல்லி பயமுறுத்துகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நபர் பயந்து போய் மோசடிக்காரர்களின் வார்த்தையை நம்பி, இந்த பிரச்சினையை சுமுகமாக முடிக்க அவர்கள் கேட்கும் பணத்தை ஒப்படைக்க ஒப்புக்கொள்கிறார். இதில் ஒரு சில பாதிக்கப்பட்டவர்கள், மோசடிக்காரர்களால் வீடியோ காலில் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்கள் வேறு யாருக்காவது போன் செய்கிறார்களா என உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றனர். அவர்கள் கேட்ட பணம் செலுத்தும்வரை பயமுறுத்தி டிஜிட்டல் அரெஸ்ட் செய்கின்றனர்.
இந்த மோசடி வலையில் சிக்கி ஏராளமான இந்தியர்கள் இதுவரை பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து அதிகப்படியான புகார்கள் வந்த நிலையில், சந்தேகத்திற்குரிய மெசேஜ்ஜோ, போனோ வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக புகார் செய்யும்படியும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
உங்களுக்கு ஏதேனும் தவறான அழைப்பு வந்தால் அதை முதலில் வெரிஃபை செய்யவும். நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பும் உங்களிடம் பேசும் நபரின் அடையாளத்தை உறுதி செய்யுங்கள். உடனடியாக பேமெண்ட் செலுத்துவது அல்லது உங்களது ரகசியத் தகவல்களைக் கேட்பது போன்ற நபர்களை நம்ப வேண்டாம்.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கவும். அதுபோன்று மெசேஜ்கள் கால்கள் ஏதேனும் உங்களுக்கு வந்தால் சைபர் கிரைம் வெப்சைட்டில் புகார் கொடுங்கள்.
ஒருபோதும் யாரிடமும் உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டாம். இவற்றை யாரிடமும் பகிராதீர்கள். உண்மையான அதிகாரிகள் உங்களிடம் போன் வழியாக இத்தகைய விவரங்களை கேட்க மாட்டார்கள்.
அவ்வப்போது எதுபோன்ற மோசடி யுக்திகள் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அப்டேட்டாக இருங்கள். அதை எப்படி எல்லாம் தடுப்பது என்பது குறித்த அறிவையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.