fax machine 
அறிவியல் / தொழில்நுட்பம்

தகவல் பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவிய ‘பேக்ஸ்’ கருவியைப் பற்றி தெரிந்து கொள்ளுவோமா?

ஆர்.வி.பதி

ற்காலத்தில் வரைபடங்கள், சர்டிபிகேட்டுகள் முதலான தகவல்களை கணினியின் மூலம் இணைத்து உலகின் எந்தப் பகுதிக்கும் அனுப்ப முடிகிறது. வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தின் வருகைக்குப் பின்னர் அதன் மூலமும் எதையும் இணைத்து நொடிப்பொழுதில் அனுப்ப முடிகிறது. ஆனால், சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் இதுபோன்ற தகவல்களை அனுப்பப் பயன்பட்ட ஒரு எலெக்ட்ரானிக் சாதனமே பேக்ஸ் (FAX) ஆகும். பேக்ஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி காகிதத்தில் உள்ள தகவல்களை உள்ளது உள்ளபடியே நிமிட நேரத்தில் உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் அனுப்பப் பயன்படுத்தப்பட்டது.

இதற்கு தகவல்களை அனுப்பும் இடத்தில் ஒரு பேக்ஸ் இயந்திரமும் பெறும் இடத்தில் ஒரு பேக்ஸ் இயந்திரமும் இருக்க வேண்டும். இந்த இரண்டு இயந்திரமும் தொலைபேசி இணைப்பு மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பேக்ஸ் இயந்திரத்திற்கும் தொலைபேசி எண் ஒன்று தரப்படும். நகல் அனுப்ப வேண்டிய தகவல் உள்ள காகிதத்தை அனுப்பப்படும் முனையில் உள்ள பேக்ஸ் இயந்திரத்தில் வைத்து நகல் செல்ல வேண்டிய பேக்ஸ் இயந்திரத்திற்கான எண்னை டயல் செய்ய வேண்டும். இணைப்பு கிடைத்ததும் காகிதத்தில் உள்ள தகவல் ஸ்கேன் செய்யப்பட்டு தொலைபேசி வயர் வழியாக மறு முனையில் உள்ள பேக்ஸ் இயந்திரத்திற்கு அனுப்பப்படும். மறு முனையில் உள்ளவர் அந்த நகலை பேக்ஸ் இயந்திரத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

பேக்ஸ் இயந்திரம் அலெக்சாண்டர் பைன், எலிசா கிரே, ஆர்தர் கார்ன் மற்றும் எட்வர்ட் பெலின் எனும் நான்கு பேர்களின் உழைப்பால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளின் ஒட்டுமொத்த வடிவமாகும். அலெக்சாண்டர் பைன் 1843ம் அண்டு ஒரு கருவியை வடிவமைத்தார். இரண்டு பேனாக்களை இரண்டு கடிகார பெண்டுலம் போன்ற ஒரு கருவியுடன் இணைத்தார். இவை ஒரு வயர் மூலம் இணைக்கப்பட்டது. இந்த உபகரணத்தின் மூலம் மின் கடத்தும் ஆற்றலுள்ள ஒரு பலகையின் மீது எழுத முடிந்தது.

1862ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த அறிஞர் கியோவனி காசெலி என்பவர் ஒரு கருவியை வடிவமைத்தார். இதற்கு பான்டெலிகிராப் எனும் பெயரை வைத்தார். இந்தக் கருவியின் மூலம் தகவல்களை அனுப்ப முடிந்தது. 1902ம் ஆண்டில் ஆர்தர் கார்ன் எனும் ஜெர்மானியர் டெலிபோட்டோகிராபி எனும் ஒரு கருவியை வடிவமைத்தார். இக்கருவியின் மூலம் புகைப்படங்களை மின் வயர் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப முடிந்தது. இவர் 1907ம் ஆண்டு மியூனிச் நகரத்திலிருந்து பெர்லின் நகருக்கு புகைப்படங்களை இக்கருவியின் மூலம் வெற்றிகரமாக அனுப்பினார்.

எட்வர்ட் பெலின் பிரான்சில் 1925ம் ஆண்டு பெலினோகிராப் எனும் ஒரு கருவியை கண்டுபிடித்தார். இக்கருவியிலிருந்த ஒரு உருளையின் மீது புகைப்படத்தை வைத்து அதை ஒரு சக்தி வாய்ந்த ஒளிக்கதிர் மூலம் ஸ்கேன் செய்து வேறொரு இடத்திற்கு அனுப்ப முடிந்தது. பேக்ஸ் இயந்திரத்தின் அடிப்படை இந்த இயந்திரத்தின் மூலம்தான் உருவானது. 1934ம் ஆண்டு அசோசியேட்டர் பிரஸ் நிறுவனம் வயர் போட்டோ எனும் முறையைக் கொண்டு வந்தது. வயர்களின் மூலம் புகைப்படங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இக்கருவியின் மூலம் அனுப்ப முடிந்தது.

முற்காலத்தில் செய்தித்தாள் நிறுவனங்கள் தொலைதூர இடங்களிலிந்து செய்திக்குத் தேவையான புகைப்படங்களை இந்த தொழில்நுட்பத்தின் மூலமே பெற்றுப் பயன்படுத்தின 1966ம் ஆண்டில் மேக்னாபேக்ஸ் டெலிகாப்பியர் எனும் ஒரு பேக்ஸ் கருவி வடிவமைக்கபட்டது. இக்கருவியின் மூலம் பேக்ஸ் செய்திகள் தொலைபேசி இணைப்பு வயர்கள் மூலம் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பப்பட்டன. ஒரு பக்க அளவுள்ள செய்தி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றடைய ஆறு நிமிடங்கள் ஆனது. 1970ம் ஆண்டிற்குப் பின்னர் பேக்ஸ் தொழில் நுட்பம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து 2015 வரை உலகம் முழுவதும் பல இலட்சக்கணக்கான மக்களால் உபயோகிக்கப்பட்டு வந்தது.

கணினியில் இணையப் பயன்பாடு மற்றும் வாட்ஸ்அப் தொழில்நுட்பம் முதலானவற்றின் வருகைக்குப் பின்னர் டாக்குமெண்டுகள் மற்றும் புகைப்படங்கள் இவற்றின் மூலம் உலகின் எப்பகுதிக்கும் மிகச் சுலபமாகவும் துல்லியமாகவும் அனுப்ப முடிகிறது. இதன் காரணமாக பேக்ஸ் கருவியின் பயன்பாடு தற்போது பெருமளவில் குறைந்து போனது.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT