செயற்கையான நல்ல காற்று, உணவு, மனிதனின் அறிவு என்று போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் நீங்கள் செயற்கையான சூரியனை பற்றி கேட்டது உண்டா? நம் பூமியை விட 109 மடங்கு பெரியதான சூரியனை அதே ஆற்றலுடன் செயற்கையாக உருவாக்கினால் எப்படி இருக்கும். வாருங்கள் அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
செயற்கை சூரியன்:
'செயற்கை சூரியன்' என்ற கருத்து சீனர்களின் Experimental Advanced Superconducting Tokamak (EAST) மூலம் வந்தது. 'சீன செயற்கை சூரியன்' என்று அழைக்கப்படும் இந்த திட்டம், சூரியனில் இயற்கையாக நிகழும் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) செயல்முறையை பிரதிபலிக்கும் நோக்கத்தை கொண்டது. தூய்மையான, நிலையான ஆற்றல் மூலத்தை உருவாக்குவது, இந்த செயல்முறையைப் பயன்படுத்துவதன் முதன்மை குறிக்கோள்.
செயற்கை சூரியன் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?
செயற்கை சூரியனை கண்டுபிடிப்பதற்கான முதன்மைக் காரணம் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதாகும். நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு போன்ற அறியப்பட்ட எரிசக்தி ஆதாரங்கள் ஓரளவு தான் நம் பூமியில் நம் தேவைக்கு இருக்கின்றன. இதற்காக நிலப்பகுதி ஆழமாக தோண்டப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுகின்றன. மறுபுறம், இந்த அணுக்கரு இணைவு(Nuclear fusion) கிட்டத்தட்ட ஓர் வரம்பற்ற சுத்தமான ஆற்றலை தான் வழங்குகிறது. அணுக்கரு பிளவுடன்(Nuclear fission)” “ ஹிரோஷிமா, நாகசாகி போன்றவற்றை ஒப்பிடும்போது இது தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடவில்லை. குறைந்தபட்ச கதிரியக்கக் கழிவுகளை(Radioactive wastes) தான் தருகிறது. இப்படி சூரியனின் இணைவு செயல்முறையைப் பிரதிபலிப்பதன் மூலம், உலகின் ஆற்றல் தேவைகளுக்கு ஒரு நிலையான தீர்வை இதன் மூலம் பெற முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
உண்மையான சூரியனுக்கும் செயற்கை சூரியனுக்கும் உள்ள வேறுபாடுகள்:
வெப்பநிலை மற்றும் அழுத்தம்: உண்மையான சூரியன் அதன் மையத்தில் சுமார் 15 மில்லியன்(ஒன்றரை கோடி) டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயங்குகிறது. இருப்பினும், செயற்கை சூரியன் அதை விட அதிக வெப்பநிலையை அடைகிறது. அதாவது 150 மில்லியன்(15 கோடி) டிகிரி செல்சியஸ் வரை அடையும். Nuclear fusion நடக்க இணைவதற்கு தேவையான பிளாஸ்மாவை கொண்டிருப்பது மற்றும் அதை அதிக நேரம் நிலைநிறுத்துவது போன்ற சவால்களை பொறுத்தே இந்த சூரியனை சாத்தியமாக்க முடியும்.
அளவு மற்றும் காலம்: சூரியன் பல பில்லியன் ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் செயற்கை சூரியன் இன்னும் சோதனை நிலையில் தான் உள்ளது. சில நிமிடங்கள் மட்டும் நீடிக்கும் படி இப்போதைக்கு வடிவம் பெற்றுள்ளது.
ஆற்றல் வெளியீடு: சூரியன் அபரிமிதமான ஆற்றலை(Energy) உற்பத்தி செய்கிறது. இது பூமியில் பல உயிர்களை நிலைநிறுத்த போதுமானதாக உள்ளது. செயற்கை சூரியன் இன்னும் இந்த அளவிலான வெளியீட்டை எட்டவில்லை. ஆனால் அதன் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க முன்னேற்றங்கள் செய்யப்படுகின்றன.
சுற்றுச்சூழல் தாக்கம்: உண்மையான சூரியனுக்கு எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கம் எதுவும் இல்லை. ஏனெனில் இது பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஓர் இயற்கையான அங்கமாகும். அதுபோல் செயற்கை சூரியன், புதைபடிவ எரிபொருட்களை(Fossil fuels) விட தூய்மையானது என்றாலும், இதை நீண்ட நேரம் செயல்படுவதற்கும் பராமரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க வளங்களும் ஆற்றலும் தேவைப்படுகிறது.
செயற்கை சூரியனின் வளர்ச்சியானது தூய்மையான, நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது சாத்தியமாக இன்னும் பல சவால்கள் இருந்தாலும், இன்றைய தொழில்நுட்பத்தின் சாத்தியமான பலன்கள் மூலம் உலகின் ஆற்றல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய வழியை உருவாக்குகிறது. இதற்கான ஆராய்ச்சி தொடர்ந்தால், செயற்கை சூரியன் நமக்கு தேவையான ஆற்றல் உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக மாறுவதை நாம் காணலாம். இது புதைபடிவ எரிபொருட்கள்(fossil fuels) மீதான நமது தேவையை குறைக்கவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தடுக்கவும் உதவியாக இருக்கும்.