21ம் நூற்றாண்டில் மனித குலத்தை அச்சுறுத்திய தொற்று நோய்களில் ஒன்றாக நிபா வைரஸ் திகழ்கிறது. பழந்தின்னி வௌவால்களிடமிருந்து தோன்றி, பன்றிகள் வழியாக மனிதர்களுக்கு பரவிய இந்த வைரஸ், பின்னர் நேரடி மனிதன்-மனிதன் தொற்று வழியாகவும் பரவக்கூடிய தன்மையைப் பெற்றது. இந்த வைரஸ் 1999 இல் மலேசியாவில் முதல் முறை பதிவாகி, பிறகு பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் தீவிரமாக பரவியது.
இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது. மூளைக்காய்ச்சல், நிமோனியா மற்றும் பிற தீவிர நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும். இந்த வைரஸ் பற்றிய முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
வரலாறு: நிபா வைரஸ் முதன் முதலில் 1998-99 ஆண்டுகளில் மலேசியாவின் சுங்கை நிபா என்ற இடத்தில் பன்றிகளின் மத்தியில் கண்டறியப்பட்டது. பின்னர் இது மனிதர்களுக்கும் பரவி பல உயிர்களைப் பறித்தது. இந்த நோய்க்கு காரணம் பன்றிகள் என தவறாக கருதப்பட்டதால், லட்சக்கணக்கான பன்றிகள் அழிக்கப்பட்டன. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த வைரஸ் பழந்தின்னி வௌவால்களிடமிருந்து பன்றிகளுக்கு பரவி பின்னர் மனிதர்களுக்கு பரவியது என்பது தெரியவந்தது.
2001 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியது. இங்கு இந்த வைரஸ் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக கருதப்படுகிறது. இதுவரை பலமுறை பங்களாதேஷில் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் அவ்வப்போது நிபா வைரஸ் தொற்று பரவுகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் படைச்சாறுகள் வழியாகவும், நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைப்பதன் மூலமாகவும் பரவியுள்ளது.
பரவல்:
வௌவால்கள்: இங்குதான் முதலில் நிபா வைரஸ் தோன்றுகின்றன.
பன்றிகள்: வௌவால்களிடமிருந்து பன்றிகளுக்கு பரவி பின்னர் மனிதர்களுக்கு பரவுகிறது.
தொற்று நோயாளிகள்: தொற்று நோயாளிகளுடன் நேரடி தொடர்பு, தொற்று கலந்து உமிழ் நீர், மூக்கு நீர் ஆகியவற்றின் மூலம் மேலும் பரவுகிறது.
தொற்று கலந்த உணவு அல்லது நீர்: தொற்று கலந்த உணவு, பழச்சாறு மற்றும் நீர் வாயிலாகவும் அதிகப்படியாக பரவுகிறது.
அறிகுறிகள்: நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம். பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, தும்மல், இருமல், குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், தூக்கமின்மை, குழப்பம், மயக்க உணர்வு, மூளைக்காய்ச்சல் ஆகியவை அடங்கும்.
சிகிச்சை: நிபா வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை. இதன் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகின்றன.
தடுப்பு முறைகள்:
பழந்தின்னி வௌவால்கள் வாழும் பகுதிக்கு செல்வதைத் தவிர்க்கவும். வௌவால்களின் கழிவுகள் அல்லது உடலில் இருந்து வரும் திரவங்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை சாப்பிடுவதற்கு முன் நன்கு சுத்தம் செய்து உண்ணுங்கள். வவ்வால்கள் பழங்களைக் கடித்திருந்தால் அவற்றை உண்ணுவதைத் தவிர்க்கவும்.
நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக தனிமை படுத்த வேண்டும். இதுவரை இதற்கு எந்த சிகிச்சை முறையும் இல்லை என்றாலும், நிபா வைரஸ் தடுப்பூசி உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இந்தப் பதிவு பொதுவான தகவல்களுக்காக மட்டுமே தவிர, நீங்கள் எந்த ஒரு சுகாதார பிரச்சனையையும் சந்தித்தால், தயவு செய்து உடனடியாக மருத்துவரை அணுகவும்.