NISAR 
அறிவியல் / தொழில்நுட்பம்

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

ராஜமருதவேல்

இந்தியாவின் இஸ்ரோ நிறுவனமும் அமெரிக்காவின் நாசா நிறுவனமும் இணைந்து புவியின் மேற்பரப்பு கண்காணிப்பு, மற்றும்  பேரிடர்களை ஆராய NISAR (NASA-ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். இது பூமியின் மேற்பரப்பை மட்டுமல்ல, பனிக்கட்டிகள், பனிப்பாறைகள், கடல்பனி மற்றும் தாவரங்களின் மாற்றங்களை துல்லியமாக ஆராயும்.

நிசாரின் அதிநவீன தொழில்நுட்பமானது, பூமியின் மாறும் காலநிலையை பற்றி ஆராய்கிறது. நிலம் மற்றும் பனியால் மூடப்பட்ட மேற்பரப்புகளின் இயக்கத்தை ஒவ்வொரு 12 நாட்களுக்கும் அளவிடுகிறது. இந்த செயற்கைக்கோள், பூகம்பங்கள், பனிக்கட்டி நகர்வுகள், நிலச்சரிவுகள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள், காடுகள், ஈரநிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் மற்றும் உள்கட்டமைப்பு நிலைத்தன்மையையும் சரிபார்க்கும்.

நிசார் இரண்டு மேம்பட்ட ரேடார் அமைப்புகளைப் கொண்டுள்ளது. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் எல்-பேண்ட் ரேடார் மற்றும் இஸ்ரோவின் எஸ்-பேண்ட் ரேடார். இரண்டையும் சுமந்து செல்லும் முதல் செயற்கைக்கோள் இதுவாகும். இந்த ரேடார்கள் பாரம்பரிய ஒளியியல் கருவிகளைப் போலல்லாமல், மேகங்கள் வழியாகவும் இரவும் பகலும் வேலை செய்கின்றன.

எல்-பேண்ட் ரேடார் கொண்டு தரையின் இயக்கத்தை அளவிடுவதற்காக அடர்த்தியான தாவரங்கள் வழியாகவும் பார்க்க முடியும். இது குறிப்பாக எரிமலைகள் அல்லது தாவரங்களால் மறைந்திருக்கும் பகுதிகளை கண்காணிக்க உதவியாக இருக்கும். மற்ற செயற்கைக்கோள்கள் மற்றும் கருவிகளின் தரவுகளுடன் இணைந்து, நிசாரின் அளவீடுகள் பூமியின் மேற்பரப்பு இயக்கத்தை கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் தெளிவாகக் காட்டும்.

நில அதிர்வு அபாயங்கள் அதிகமாக இருக்கும் இமயமலை போன்ற பகுதிகளில் இந்த தொடர்ச்சியான கண்காணிப்பு சிறப்பானதாக இருக்கலாம். "இந்தப் பகுதி கடந்த காலங்களில் பெரிய அளவிலான நிலநடுக்கங்களை உருவாக்கியுள்ளது, மேலும் இமயமலையின் நில அதிர்வு அபாயங்கள் பற்றிய தகவல்களை நிசார் எங்களுக்கு வழங்கும்" என்கிறார் இஸ்ரோவின் புவி அறிவியல் தலைவர் ஸ்ரீஜித் கேஎம் கூறினார்.

பேரழிவுகள் மட்டுமின்றி அத்தியாவசிய உள்கட்டமைப்பைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் உதவும். நதிக்கரைகளின் உறுதியான தன்மையையும் ஆராயும். அமெரிக்காவின் பெரிய நதிக் கரைகளில் ஏற்படும் கரை உடைப்பை முன் கூட்டியே கண்டறிந்து வெள்ளப் பெருக்கையும் தடுக்க முடியும்.

இந்த இரு நாடுகளின் கூட்டு முயற்சி வரலாற்றின் சிறப்பான தொடக்கமாகும். அமெரிக்க-இந்திய ஒத்துழைப்பானது பேரிடர்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும். நிசார் கூட்டாக நிர்வகிக்கப்படும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நிசார் செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளது.

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

SCROLL FOR NEXT