அமேசான் நிறுவனம் போட்ட புதிய உத்தரவை ஊழியர்கள் மீறியதால் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதனால் பலரும் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
வொர்க் பிரம் ஹோம் என்ற வீட்டிலிருந்து பணிபுரியும் கலாச்சாரம் கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே உலகம் முழுவதும் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இத்தகைய வீட்டிலிருந்து பணிபுரியும் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகின்றன. ஆனால் தற்போது கொரோனா சார்ந்த பயம் முற்றிலும் நீங்கிவிட்ட நிலையில் நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு கூறி வருகின்றனர்.
2023 பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யுமாறு ஊழியர்களிடம் அமேசான் நிறுவனம் கேட்டுக்கொண்டது. தங்களின் தொழிலை மேலும் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டுமென்ற விதிமுறையை கடந்த மே மாதத்திலிருந்தே தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியது அமேசான். அமேசான் நிறுவனத்தின் இந்த திடீர் மாற்றத்தினால் அதன் ஊழியர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இதனால் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக போராட்டமும் செய்தனர்.
இந்நிலையில் இந்த புதிய உத்தரவுக்கு கீழ்ப்படியாக ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மின்னஞ்சலில், நிறுவனம் சொல்வது போல வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்றும், அவர்கள் பணி செய்வதற்கான இடங்களும் தயார் நிலையில் உள்ளது என்று கூறப்பட்டது. இருப்பினும் இதை பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளாததால், சில பணியாளர்களை அமேசானின் சென்ட்ரல் ஹப்பிற்கு வந்து பணியாற்றுமாறு கூறப்பட்டது. இதனால் கடுப்பான சில ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளனர்.
இருப்பினும் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் அனைவருமே 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்திற்குள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய அமேசான் நிறுவனம், நாங்கள் சில ஹைபிரிட் பணிச் சூழலை சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்காக பணியாளர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து இயங்க வேண்டியது அவசியமாக உள்ளது. அத்துடன் பணியாளர்களின் கஷ்டங்களையும் நாங்கள் காது கொடுத்து கேட்டு வருகிறோம்.
இறுதியில் நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு நாம் எப்படி சிறப்பானவற்றை கொடுக்கிறோம் என்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.