மனித மூளையிலேயே கணினியை உருவாக்கலாம் என்றால் நம்புவீர்களா? இதைக் கேள்விப்படுவதற்கு ஏதோ சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் போல தோன்றலாம். ஆனால் இதை உண்மையாகி சாதித்துள்ளனர் ஸ்வீடன் விஞ்ஞானிகள்.
FinalSpark என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் Brainware என்கிற முற்றிலும் புதுமையான கணினியை உருவாக்கியுள்ளனர். இது மனித மூளையின் நியூரான்கள் மற்றும் ஹார்ட்வேர் சாதனங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. Brain மற்றும் Hardware என்ற இரண்டு பெயர்களையும் இணைத்து Brainware என்ற பெயர் வைத்துள்ளனர்.
இந்த கணினியை உருவாக்க விஞ்ஞானிகள் முதலில் மனித மூளையின் ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்து, ஆய்வகத்தில் நியூரான்களின் பண்புகளை உருவாக்கினர். இந்த கண்டுபிடிப்பு சாதாரண கணினி சிப்பைப் போலவே சிக்கல்களை அனுப்பக்கூடியதாகும். மனித மூளையில் உள்ள நியூரான்கள், 80 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடியவை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள செயற்கை நியூரான்கள் 100 நாட்கள் மட்டுமே உயிருடன் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கணினியானது தற்போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாதனங்களை விட சுமார் 10 லட்சம் மடங்கு குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் என சொல்லப்படுகிறது. இதன் மூலமாக அதிகம் மின்சார செலவு இல்லாமல் இயங்கும் முதல் கணினி என்கிற பெருமை இதற்குக் கிடைத்துள்ளது. இன்றைய காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு மூலமாக மின்சாரப் பயன்பாட்டை குறைக்கும் பரிசோதனைகளை நடத்தி வருவதாக FinalSpark நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே எலான் மஸ்க் மனித மூலையில் சிப் பொருத்தும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிவரும் நிலையில், இப்போது இந்த கண்டுபிடிப்பு, பல புதிய முன்னெடுப்புகளை ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது. இது மட்டும் முழுமையாக வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் நாம் அனைவருமே நமது மூளைக்குள்ளையே ஒரு கணினியை சுமந்து செல்வோம்.