Tiantong – 1 - 3 
அறிவியல் / தொழில்நுட்பம்

டவர் இல்லாமல் ஸ்மார்ட் போனில் பேசலாமா? – சீனாவின் சாதனை!

பாரதி

தொலைத்தொடர்புத் துறையில் சீனா ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாகவும், இந்தச் சாதனை உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது இனி செல்போன் டவர்கள் இல்லாமலேயே ஸ்மார்ட் போனில் பேசும் விதமாக சீனா ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளது.

சில உலக நாடுகள் போரில் கவனம் செலுத்தி வரும் நேரத்தில், சீன விஞ்ஞானிகள் ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளனர். சீனா வானிலை, சாட்டிலைட், விமானங்கள் என்று பல்வேறு துறைகளில் ஆய்வுகள் நடத்தி, அதில் சாதனையும் படைத்து வரும் நாடாக உள்ளது. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவிற்கே சவால் விடும் ஒரு நாடு என்றால், அது சீனா என்றே கூறலாம். அதேபோல், சீனா விண்வெளியில் தங்களுக்கென தனியான ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இப்படி பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சீனா, தற்போது ஒரு முயற்சியில் வெற்றிக்கண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

சீனா 2016ம் ஆண்டு முதல் Connecting with Heaven என்ற திட்டத்தின் மூலம் Tiantong – 1 என்ற செயற்கைக் கோளை அனுப்பி ஆய்வு செய்து வந்தது. இந்த ஆய்வின் மூலம் செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக சாட்டிலைட் மூலமாக பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு நடத்தி வந்தது. அந்தவகையில் தற்போது மூன்று Tiantong செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வளவு ஆண்டுகள் சீனா செய்துவந்த முயற்சி தற்போது வெற்றியடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன்மூலம் பசிபிக் மற்றும் ஆசியா பிராந்தியம் முழுவதும் செல்போன் டவர்கள் இல்லாமல் இனி பேச முடியும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாட்டிலைட் அழைப்புகளை சப்போர்ட் செய்யும் முதல் செல்போனை ஹவாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதனையடுத்துதான் இந்த மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளவில் சீனாவிலிருந்து விற்பனையாகும் சீனாவின் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள், சாட்டிலைட் உதவியுடன் பேசும் வசதியுடன்  தயாரிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வசதியால், சுனாமி, நிலநடுக்கம், புயல் போன்ற பேரிடர் நேரங்களிலும் தடையின்றி பேசலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் பல வழிகளில் இது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். இதனால், விரைவிலேயே இந்த வகையான செல்போன்கள் உலகளவில் பிரபலமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

SCROLL FOR NEXT