கர்நாடகா: வாரிசுகளுக்கு வாய்ப்பு - ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறதா காங்கிரஸ்?

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

ர்நாடகாவில் சிக்கோலி பாராளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார் பிரியங்கா ஜர்கிஹோலி. வயது 27. பெலகவி தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவர் மிருனாள் ஹெப்பால்கர். வயது 31. பிதர் தொகுதிக்கு சாகர் கண்டரே. வயது 26. பாகல்கோட் தொகுதிக்கு சம்யுக்தா பாடில். வயது 29. சாம்ராஜ்நகர் தொகுதியில் சுனில் போஸ். வயது 42. தெற்கு பெங்களூரு தொகுதியில் சவும்யா ரெட்டி. வயது 41. இந்த இளம் வேட்பாளர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் பெற்றிருப்பவர்கள்.

பிரியங்கா ஜர்கிஹோலி
பிரியங்கா ஜர்கிஹோலி

இவர்கள் அனைவருக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் உள்ள தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், அதாவது தற்போதைய கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதிஷ் ஜர்கிஹோலி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்டரே, ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த பாடில், சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோரது வாரிசுகள் தற்போது களத்தில் இருக்கிறார்கள்.

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள்ளே, இந்த வாரிசுகளுக்கு டிக்கெட் கொடுப்பதற்கு எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்தான் காங்கிரஸ் கட்சி மேலிடம் இவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த வேட்பாளர்கள் அனைவரும், சில மாதங்களுக்கு முன்பாகவே தங்கள் தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் துவக்கிவிட்டார்கள்.

சம்யுக்தா பாடில்
சம்யுக்தா பாடில்

காங்கிரஸ் கட்சி இப்படி வாரிசுகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வாரி வழங்கி இருப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கட்சியின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டுவிட்ட நிலையில் தேர்தலில் செலவு செய்வதற்குக் கட்சியிலிருந்து பெரிய அளவில் பணம் கொடுப்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

சவும்யா ரெட்டி
சவும்யா ரெட்டி

எனவே, தற்போது அமைச்சராக இருப்பவர்களின் வாரிசுகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டால், சீட் கொடுத்ததேபோதும் என்று சொல்லி அவர்கள் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் களத்தில் இறங்கிவிடுவார்கள். அவர்களுக்கு உள்ள லோக்கல் செல்வாக்கு, அவர்களது வாரிசுகளின் தேர்தல் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சாண்ட்விச், பூமராங் தலைமுறைகள் பற்றித் தெரியுமா?
டி.கே.சிவகுமார்

இதுபற்றி, “காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் நிறுத்த வேட்பாளர்களுக்கே பஞ்சம் வந்துவிட்டது. தற்போதைய அமைச்சர்கள், தோல்வி பயத்தில் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்கள். அதேநேரத்தில், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்கிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் கட்சிக்காக உழைக்கும் சாமானியர்களுக்கு என்றுமே மரியாதை கிடையாது” என்று பாஜக தரப்பில் விமர்சனம் எழுந்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்காரரான கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘எனது நாற்பதாண்டு அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ் கட்சியில் இதுவரை காணாத அளவுக்கு இப்போது இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், புது முகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று பெருமையோடு சொல்லி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com