ஆட்டோமொபைல் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோன டெஸ்லா நிறுவனத்தின் கார்கள், ஐரோப்பா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் விற்கப்பட்டாலும், இன்னும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் கமர்சியல் கார்களாக மாறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த கார்களின் அதிகப்படியான விலைதான்.
சமீப காலமாகவே தான் நடத்தி வரும் எல்லா நிறுவனத்திலும் பல மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்திலும் அதன் தயாரிப்புகளின் விலையைக் குறைத்து வருகிறார். இதனால் லாபம் ஏற்படும் என்று பார்த்தால், முதலீட்டுச் சந்தையில் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உருவானது. இதை சமாளிக்க டெஸ்லா நிறுவனமும் ஒரு கமர்சியல் கார் நிறுவனமாக மாறி பங்குச்சந்தையில் அசத்த வேண்டும் என முடிவெடுத்தது. எலான் மாஸ் இதற்காக நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்த குறைந்த பட்ஜெட்டில் டெஸ்லா கார் தயாரிக்கும் திட்டத்தை மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளார். அதாவது 24000 டாலருக்குக் குறைவான பட்ஜெட் விலையில் டெஸ்லா கார் என்ற திட்டம்தான் அது.
சமீபத்திய டெஸ்லா கார்களின் விலைக் குறைப்பால், அதன் பங்குகள் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டது. இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்றெண்ணி பட்ஜெட் கார் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார் எலான் மஸ்க். இந்த கார் தயாரிப்பதற்கான தொழிற்சாலை இந்தியாவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எலான் மஸ்கின் விருப்பமாம். அதற்காக 24000 டாலர் அதாவது 19 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட டெஸ்லா காரை இந்தியாவில் தயாரிப்பதற்காக, டெஸ்லா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.
உலகளாவிய விற்பனையில் சீனாவில் டெஸ்லா மாடல் 3 ரக காரை 32,200 டாலர்கள் என்கிற விலைக்கு தற்போது டெஸ்லா விற்பனை செய்கிறது. எனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் கமர்சியல் கார்களை 24,000 டாலருக்கும் குறைவாக விற்பதற்கு டெஸ்லா திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த பட்ஜெட் விலை கார்கள் இந்தியாவில் விற்கப்படுவது மட்டுமல்லாமல், உலக நாடு அனைத்திற்கும் ஏற்றுமதி செய்வதில் டெஸ்லா நிறுவனத்திற்கு, இந்தியா முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிலையமாக மாற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இந்த மலிவு விலையில் கமர்சியல் கார் திட்டம் கைகூடினால், இதைப் பயன்படுத்தி உலக நாடுகள் முழுவதும் தானாக இயங்கும் ரோபோட்டிக் டாக்ஸியை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கத் திட்டமிட்டுள்ளார். பட்ஜெட் விலை கார்களை தயாரிப்பதற்கு டெஸ்லா நிறுவனம் தற்போது மெக்சிகோவில் தொழிற்சாலையை கட்டமைத்து வரும் நிலையில், அதன் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.