Edge Computing 
அறிவியல் / தொழில்நுட்பம்

மைய கணினியுடனான இணைப்பு முறிந்தால் அதோகதிதானா? Edge Computing சொல்வது என்ன?

என். சொக்கன்

ரு பெரிய நிறுவனத்தின் ஆண்டுவிழாவுக்குச் சென்றிருந்தேன். அந்த விழா ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எல்லாருக்கும் ஒரு பெரிய சமையல் கலைஞருடைய கைவண்ணத்தில் சுவையான உணவு பரிமாறப்பட்டது.

ஆனால், அங்கு பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் அங்கு சமைக்கப்படவில்லை. பெரும்பாலான உணவுகளை அந்த விடுதியின் அதிநவீன, எல்லா வசதிகளையும் கொண்ட மையச் சமையலறையில் சமைத்துக் கொண்டுவந்திருந்தார்கள். தோசை, நான், ரொட்டி, ஜிலேபி போன்ற சில உணவுகளைமட்டும் அந்த இடத்திலேயே சமைத்துச் சுடச்சுடப் பரிமாறினார்கள்.

ஒருவேளை, ஏற்கெனவே சமைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டால்?

அதைக் கவனிப்பதற்கென்று ஒருவர் அங்கு இருந்தார். அவர் எந்தெந்த உணவுகள் தீரப்போகின்றன என்பதைக் கவனித்து உடனுக்குடன் மையச் சமையலறைக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் பணியாளர்கள் அங்கிருந்து மேலும் உணவுகளைக் கொண்டுவந்து நிரப்பினார்கள்.

சில நாட்களுக்குப்பிறகு, நான் இன்னோர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அந்த அலுவலகத்தில் எனக்கு ஒரு சின்ன வேலை இருந்தது. ஆனால், அந்த வேலையைச் செய்துமுடிப்பதற்கு நான்கு மணிநேரம் ஆகிவிட்டது. ஏனெனில், அந்த அலுவலகத்தைச் சேர்ந்த கணினித் தொழில்நுட்பக் கலைஞர்கள் மேற்சொன்ன நட்சத்திர விடுதியின் விருந்தோம்பல் பிரிவினரைப்போல் அறிவோடு செயல்படவில்லை.

இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா? விளக்கிச் சொல்கிறேன், கேளுங்கள்.

நான் சென்ற அலுவலகத்தில் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான் நான் குறிப்பிட்ட வேலையைச் செய்யவேண்டும். ஆனால், அந்தக் கணினி அந்த நிறுவனத்தின் மையக் கணினியுடன் இணையத்தின்மூலம் இணைக்கப்பட்டிருந்தது. நான் சென்ற நாளில் அந்த இணைப்பு முறிந்துவிட்டது. அதனால், அரை நிமிட வேலைக்கு நான் நான்கு மணிநேரம், அதாவது, இணைப்பு சரியாகும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது.

நீங்களும் இந்தச் சிக்கலைப் பல இடங்களில் எதிர்கொண்டிருப்பீர்கள், 'சர்வர் டவுன்', 'சிஸ்டம் டவுன்', 'நெட்வொர்க் டவுன்' என்று விதவிதமான சொற்களில் இது உங்களுக்கு விளக்கப்பட்டிருக்கும்.

அப்போதெல்லாம் நாம் அவர்களிடம் கேட்க நினைக்கிற கேள்வி, 'மையக் கணினியுடனான இணைப்பு முறிஞ்சா என்ன? உங்க முன்னாடி ஒரு கணினி இருக்கே. அதை வெச்சு எங்க வேலையைச் செய்யமுடியாதா? அப்புறம் இணைப்பு சரியானதும் அந்தத் தகவலை மையக் கணினிக்குத் தெரிவிக்கமுடியாதா?'

'அதெல்லாம் முடியாது சார், இணைப்பு இருந்தாத்தான் வேலை நடக்கும்.'

இந்தச் சிக்கலைத்தான் அந்த நட்சத்திர விடுதியினர் மிகச் சிறப்பாகக் கையாண்டிருந்தார்கள். அவர்களுடைய மையச் சமையலறையில் (அதாவது, மையக் கணினியில்) உள்ள உணவுகளை (தகவல்கள், மென்பொருட்களை) விருந்தினருக்கு அருகில் உள்ள மேசையில் (அலுவலகக் கணினியில்) இறக்கிவைத்துவிட்டார்கள். அதன்மூலம், நமக்கு வேண்டியது உடனடியாகக் கிடைக்கும், தேவையானபோதுமட்டும் மையக் கணினியை அணுகினால் போதும். எப்போதும் இணைப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதில்லை.

ன்னதான் இணையம் அதிவேகமாக வளர்ந்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் இணைப்பை எதிர்பார்ப்பது வாடிக்கையாளர்களுடைய அனுபவத்தைக் கெடுக்கக்கூடும். இதைத்தான் Edge Computing எனப்படும் விளிம்புக் கணக்கிடல் சரிசெய்கிறது. அதாவது, மையச் சேவையகம் மேகத்தில் (Cloud Server) இருக்கும். ஆனால், வாடிக்கையாளர் ஒவ்வொருமுறையும் அதை அணுகிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. சில சிக்கலான வேலைகளுக்குமட்டும் அவர் நேரடியாக மையச் சேவையகத்தைத் தொடர்புகொள்ளவேண்டும். மற்ற பெரும்பாலான வேலைகளை அவருக்கு அருகில் இருக்கும் விளிம்புச் சேவையகம் (Edge Server) செய்துவிடும். அதனால், வேலைகள் விரைவாக நடக்கும்.

அப்படியானால், இரண்டு வெவ்வேறு சேவைகங்களிலும் வெவ்வேறு தகவல்கள் இருந்து குழப்பத்தை உண்டாக்காதா?

இல்லை. மையச் சேவையகம்தான் முதன்மையானது. விளிம்புச் சேவையகத்தின் நோக்கம், வாடிக்கையாளருக்கு விரைவான சேவையைக் கொடுப்பதுமட்டும்தான். பின்னணியில் அது அவ்வப்போது மையச் சேவையகத்துடன் தொடர்புகொண்டு தன்னுடைய தகவல்களை ஒத்திசைத்துக்கொண்டுவிடும். இதன்மூலம் எந்தக் குழப்பமும் வராது.

எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி வாடிக்கையாளர் தன்னுடைய முகவரியை மாற்ற விரும்புகிறார் என்றால், வங்கிப் பணியாளர் விளிம்புச் சேவையகத்துடன் தொடர்புகொண்டு அதை விரைவில் செய்துவிடலாம். அதன்பிறகு, விளிம்புச் சேவையகம் மையச் சேவையகத்தைத் தொடர்புகொண்டு, 'இவருடைய முகவரி இப்படி மாறியிருக்கிறது' என்று தெரிவித்துவிடும். இதன்மூலம் வாடிக்கையாளரும் மகிழ்ச்சியடைவார், தகவல்களும் பிழையில்லாமல் இருக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT