உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே இணையப் பயன்பாடு மாறிவிட்டது. மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்களை சரி பார்ப்பது முதல், ஆன்லைன் ஷாப்பிங், தொலைதூர வேலை வரை இணையதளமானது நாம் தொடர்பு கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், வணிகத்தை மேற்கொள்ளவும் அதிகம் பயன் படுத்தப்படுகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் பாதுகாப்பு என்பது தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய கவலை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. சமீப காலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதால், நம் முக்கிய தகவல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுப்பது அவசியமான ஒன்று.
Two Factor Authentication (2FA) என்பது ஒரு ஆன்லைன் கணக்கை அணுகுவதற்கு பயனர்கள் இரண்டு வெவ்வேறு வகையான அடையாளங்களை வழங்க வேண்டிய ஒரு பாதுகாப்பு செயல்முறையாகும்.
இதில் பல்வேறு வகைகள் உள்ளன. ஆனால் மிகவும் பொதுவான முறையாக கடைபிடிக்கப்படுவது SMS அடிப்படையிலான OTP செயல்முறை. அதாவது ஒரு கணக்கிற்கு வெறும் பாஸ்வேர்டு மட்டும் போட்டு உள்ளே நுழையாமல், இரண்டாவதாக அந்த கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பி அதையும் உள்ளீடு செய்தால் மட்டுமே அந்த கணக்கினுள் நுழைய முடியும். இந்த செயல்முறை ஒருவருடைய கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை சேர்க்கிறது. இதனால் ஹேக்கர்கள் ஒரு கணக்கை அணுகுவதையும் கடினமாக்குகிறது.
இதன் முக்கியத்துவம் என்னவென்றால் ஒருவருடைய இணையதள கணக்கின் பாஸ்வேர்டு மட்டும் தெரிந்தால் போதும் அதில் யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்ற நிலையில் இருந்தது. அதை சிலர் தவறாக பயன்படுத்துவதை உணர்ந்த நிறுவனங்கள், இந்த Two Factor Authentication முறையை செயல்படுத்தத் தொடங்கின. இதன் மூலமாக இணையதள கணக்குகளின் அங்கீகரிக்கப்படாத உள்நுழைவுகளின் அபாயமானது கணிசமாகக் குறைந்தது.
தற்போது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்கள், துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் போன்ற தவறான விஷயங்கள் இணையத்தில் அதிகரித்துவிட்டன. எனவே ஒவ்வொரு தனி நபரும், நிறுவனங்களும் தங்களின் இணையப் பயன்பாடு குறித்து கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
உங்களுடைய கணக்குகளுக்கு நீங்கள் 2FA செயல்படுத்தி விட்டீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.