ஒரு காலத்தில் விலை உயர்ந்ததாகவும், கையில் சுமந்து செல்வதற்கே கடினமாகவும் கருதப்பட்ட சாதனம் தற்போது கைக்கு அடக்கமாக பயன்படுத்தும் வகையில் உருமாறியுள்ளது. அதிலும் தற்போது மினியேச்சர் என்று புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல கருவிகளையும் மிகக் குறுகியதாக மாற்றி வருகின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்துள்ளது. அவ்வாறாக உலகிலேயே மிகச்சிறிய கேமரா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மருத்துவத் துறையில் இத்தகைய சிறிய ரக கேமராக்கள் ஏராளமான நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. 0.575×0.575 என்ற அளவில் இருக்கும் இந்த சிறிய ரக கேமரா, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது கிட்டத்தட்ட ஒரு சிறிய மண் அளவுக்கு உள்ளது. இதைப் பற்றி அறிந்த சோசியல் மீடியா பயனர்கள் இந்த அளவுக்கு கூட கேமரா தயாரிக்க முடியுமா என்ற ஆச்சரியத்துடன் இந்தத் தகவலை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சிறிய மைக்ரோ கேமராவின் பெயர் 'OV6948'. அமெரிக்காவைச் சேர்ந்த OmniVision டெக்னாலஜி என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதுவரை தயாரிக்கப்பட்ட கேமராக்களிலேயே இதுதான் மிகச் சிறிய அளவு கொண்டது என்பதால், இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற சாதனங்களை மருத்துவத்துறைக்கு பயன்படும் வகையில் ஆம்னிவிஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த சாதனத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயாரித்துள்ள இந்நிறுவனம், இதைப் பராமரிப்பதற்கு பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை என்றும் கூறுகிறது.
எண்டோஸ்கோப் கேமராக்களை சரியான முறையில் சுத்தம் செய்யாததால் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கவே இத்தகைய கேமராக்களை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம். இதனால் பெரிய அளவிலான எண்டோஸ்கோப் கருவிகளுக்கு பதிலாக அதிக செலவில்லாத சிறிய டயாமீட்டர் கொண்ட எண்டோஸ்கோப் கருவிகள் சிறந்த இமேஜ் குவாலிட்டியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சாதனம் மற்ற கேமராக்கள் போல பயன்படுத்தும்போது அதிக சூடாகாமல் இருக்கும் என்பதால், Chip on Tip கேமரா என இதை உற்பத்தி செய்த டெவலப்பர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த சிறிய ரக கேமராவுக்கு அதிக உணரும் திறன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது கேமரா துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.